பிஹார் துணை முதல்வர் காருக்கு மீது செருப்பு, கற்கள் வீச்சு – டிஜிபிக்கு கடும் நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையர் உத்தரவு
பிஹார் மாநிலத்தின் லக்கிசராய் தொகுதியில் பாஜக வேட்பாளரும், துணை முதல்வருமான விஜய் குமார் சின்ஹா பயணம் செய்த காரின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து கடும் கண்டனம் தெரிவித்து, அதில் தொடர்புடையவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு மாநில காவல்துறைத் தலைவருக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.
தகவலின்படி, லக்கிசராய் தொகுதி பாஜக வேட்பாளர் விஜய் குமார் சின்ஹா, தனது தொகுதிக்குள் உள்ள கோரியாரி என்ற கிராமத்திற்குச் சென்றபோது, அங்கு இருந்த ராஷ்ட்ரிய ஜனதா தள (RJD) ஆதரவாளர்கள் அவரது காரின் மீது செருப்பு, கற்கள் மற்றும் மாட்டு சாணம் வீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசும்போது துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹா கூறியதாவது:
“என் மீது தாக்குதல் நடத்தியவர்கள் RJD-யைச் சேர்ந்த குண்டர்கள். அவர்கள் என்னை கிராமத்துக்குள் செல்ல விடாமல் தடுத்தனர். என் வாக்குச்சாவடி முகவரை திருப்பி அனுப்பியுள்ளனர். கோரியாரி கிராமத்தின் பூத் எண்கள் 404 மற்றும் 405. நான் சென்றபோது, எனக்கு எதிராக கோஷங்களை எழுப்பி, தாக்குதல் நடத்தினர்,” என்று தெரிவித்தார்.
பொதுவாக அமைதியாக நடைபெற்றதாக கூறப்படும் பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவில், இந்த வன்முறை சம்பவம் ஒரு கரும்புள்ளியாக மாறியுள்ளது.
இதைத் தொடர்ந்து, மாநில காவல்துறை தலைவருக்கு உத்தரவு பிறப்பித்த தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்,
“சட்டத்தை யாரும் தங்கள் கைகளில் எடுக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,”
என்று தெரிவித்ததுடன்,
“அனைத்து வாக்காளர்களும் தங்கள் வாக்குகளை எந்த அச்சமுமின்றி பாதுகாப்பாக பதிவு செய்யலாம்,”
என்றும் பொதுமக்களை உறுதிப்படுத்தினார்.