உலகக்கோப்பை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணியுடன் பிரதமர் மோடி உரையாடல்
உலகக்கோப்பை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தனது இல்லத்தில் சந்தித்து வாழ்த்தினார். தொடர்ச்சியான மூன்று தோல்விகளுக்குப் பின் கடுமையாக உழைத்து மீண்டும் எழுந்து வெற்றி பெற்றதற்காக வீராங்கனைகளை அவர் பாராட்டினார்.
ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி நடப்பு மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் பெற்றது. அந்த அணியின் வீராங்கனைகள் உலகக்கோப்பையுடன் புதன்கிழமை பிரதமர் மோடியை சந்தித்து அவரின் வாழ்த்துகளை பெற்றனர்.
சந்திப்பின்போது பல சுவாரஸ்யமான உரையாடல்கள் நடந்தன. “2017ல் நாங்கள் உங்களைச் சந்தித்தது இன்னும் நினைவில் இருக்கிறது. அப்போது கோப்பையில்லாமல் வந்தோம்; ஆனால் இந்த முறை கடுமையான உழைப்பின் பலனாக கோப்பையுடன் வர முடிந்தது என்பதில் பெருமை கொள்கிறோம்” என்று கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் தெரிவித்தார்.
துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா, “பிரதமரின் ஊக்கமான வார்த்தைகள் எங்கள் வெற்றிக்கு மிகுந்த ஆற்றல் அளித்தன” என்றார். போட்டியின் சிறந்த வீராங்கனை தீப்தி சர்மா, “2017 முதல் உங்களை மீண்டும் சந்திக்கக் காத்திருந்தேன்” என கூறியபோது, பிரதமர் மோடி புன்னகையுடன், “நீங்கள் சிறப்பான பணியைச் செய்துள்ளீர்கள். இந்தியாவில் கிரிக்கெட் என்பது விளையாட்டைத் தாண்டி மக்களின் உணர்வாகும். கிரிக்கெட்டில் வெற்றி என்றால் நாடு மகிழ்ச்சி அடையும்; தோல்வி என்றால் நாடு துயரப்படும்” என்று பதிலளித்தார்.
உரையாடலின் போது பிரதமர் தீப்தி சர்மாவின் ஹனுமான் டாட்டூ குறித்து ஆர்வத்துடன் கேட்டார். அதற்கு தீப்தி, “எனது கையில் உள்ள ஹனுமான் டாட்டூவும், இன்ஸ்டாகிராம் பயோவில் உள்ள ‘ஜெய் ஸ்ரீ ராம்’ வாசகமும் எனக்கு ஆன்மீக பலம் அளிக்கின்றன” என்று கூறினார்.
ஹர்லீன் தியோல் பிரதமரிடம் சிரிப்புடன் “உங்கள் சரும பராமரிப்பு ரகசியம் என்ன?” என்று கேட்டபோது, மோடி நகைச்சுவையுடன், “அதைப்பற்றி நான் யோசிப்பதே இல்லை!” எனச் சொன்னார்.
அதேபோல், ஹர்மன்ப்ரீத் பிரதமரிடம், “எப்போதும் நிகழ்காலத்தில் எப்படி இருக்க முடிகிறது?” எனக் கேட்டார். அதற்கு மோடி, “அது என் வாழ்க்கைமுறை; காலத்தால் அது என் இயல்பாகி விட்டது” என்று பதிலளித்தார்.
மேலும், பிரதமர் அங்கு இருந்த வீராங்கனைகளிடம், நாட்டின் பெண்கள் மத்தியில் ‘ஃபிட் இந்தியா’ விழிப்புணர்வை பரப்ப வேண்டும் என்று வலியுறுத்தினார். நாட்டில் அதிகரித்து வரும் உடல் பருமன் பிரச்சனை குறித்து கவலை தெரிவித்த அவர், தினசரி உடற்பயிற்சி செய்வது எவ்வளவு முக்கியம் என்பதை விளக்கினார்.