“இது வாரிசு அரசியல் அல்ல… நாட்டுக்கான எங்கள் தர்மம்!” – பிஹாரில் பிரியங்கா காந்தி உரை
பிஹார் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு சம்பாரண் மாவட்டம் வால்மிக நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரியங்கா காந்தி பேசினார்.
அவர் கூறியதாவது, “எங்கள் முன்னோர்கள் செய்த தியாகங்களை வாரிசு அரசியலாக குற்றசாட்ட முடியாது. இது வாரிசு அரசியல் அல்ல; இது நாட்டுக்கான எங்கள் தர்மம். நாங்கள் மக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறோம். நாட்டின் செல்வம் அனைவருக்கும் சொந்தமானது என்பதை நாங்கள் உணர்த்தி வந்தோம்.
பாஜக தலைவர்கள் தினமும் நேருவை அவமதித்து, நாட்டை பாதிக்கும் அனைத்து தீமைகளுக்கும் அவரையே குற்றம் சாட்டுகிறார்கள். அதேநேரத்தில், வெளிநாட்டில் அவரை புகழ்ந்து கொண்டாலும், நேருவின் சொந்த நாட்டில் அவமானப்படுத்தப்படுகிறார்.
பிஹாரில் எளிய மக்களின் வாக்குரிமை ஆபத்தில் உள்ளது. எனது சகோதரர் ராகுல் காந்தி, வாக்காளர் அதிகார யாத்திரை நடத்தி அவர்களுக்காக போராடினார். நான் சிறிது கலந்து கொண்டேன். தற்போது, ஹரியானாவில் நடந்த வாக்குத் திருட்டை அம்பலப்படுத்தி குறிப்பிடப்படுகிறது. பிரதமர் மோடி, வாக்காளர் உரிமை பற்றி பேசும்போது, ஊடுருவியவர்களுக்காக நாங்கள் பணியாற்றுகிறோம் என்று கூறுகிறார். மக்களே, நீங்கள் உண்மையில் ஊடுருவியவர்களாக கருதப்படுகிறீர்களா?” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர், இந்தியாவில் வாரிசு அரசியல் ஜனநாயகத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது என்றும், திறமையை புறந்தள்ளி வாரிசுகளுக்கு முன்னுரிமை அளிப்பதால் ஆட்சி நிர்வாகத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். இந்தியாவின் ஒவ்வொரு கட்சியிலும், மாநில அரசிலும் வாரிசு அரசியல் நீடித்து வருகிறது; 11 மத்திய அமைச்சர்கள் மற்றும் 9 முதல்வர்கள் இதற்கான எடுத்துக்காட்டுகள் என அவர் கூறினார்.