ஹரியானாவில் 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்டதால் காங்கிரஸ் தோற்றம் – ராகுல் காந்தி
ஹரியானாவில் 2 கோடி வாக்காளர்களில் 25 லட்சம் வாக்குகள் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதனால் காங்கிரஸ் ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
புதுடெல்லியில் காங்கிரஸ் தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, “ஹரியானா தேர்தலில் அனைத்து கருத்துக்கணிப்புகளும் காங்கிரஸின் வெற்றி உறுதி என்று காட்டியது. ஆனால் முறைகேடுகளால் வெற்றி பெற முடியவில்லை. ஹரியானாவில் தபால் வாக்குகள் எண்ணிக்கை தேர்தல் முடிவுகளுடன் பொருந்தவில்லை. இது ஒரு தெளிவான ஆட்சித் திருட்டு. ஜென் ஸீ தலைமுறையினர் வாக்கு திருட்டின் தாக்கத்தை புரிந்து கொள்ள வேண்டும். இளம் வாக்காளர்களின் எதிர்காலம் இது மூலம் பாதிக்கப்படுகிறது” என்றார்.
ராகுல் காந்தி மேலும் கூறியதாவது:
- ஹரியானாவில் 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்டுள்ளன.
- சில வாக்காளர் பட்டியலில் பிரேசில் பெண் மாடலின் படங்கள் பல பெயர்களில் இருந்தது.
- 5,21,619 போலியான வாக்குகள் பதிவானுள்ளன. ஒரே தொகுதியில் ஒரே புகைப்படத்தைக் கொண்டு 100 வாக்குகள் திருடப்பட்டுள்ளன.
- சில வாக்குச்சாவடிகளில் 200, 100, 50 வாக்குகள் போலியானவை.
- 1,24,177 வாக்காளர்களின் புகைப்படங்கள் போலியானவை எனக் கண்டறியப்பட்டு, ஒரே முகவரியில் பல வாக்காளர்கள் இருந்தனர்.
- முக்கிய சிசிடிவி ஆவணங்கள் தேர்தல் ஆணையம் அழித்துவிட்டது, ஆனால் வோட்டர்கள் சரிபார்க்கும் மென்பொருள் வசதி உள்ளது.
- ஒரே நபர் ஒரே நாளில் பல வாக்குகளை செலுத்த முடியுமா என்பது கேள்வி எழுப்பப்படுகிறது.
அவர் இதை பவர் பாயிண்ட் மூலம் விரிவாக விளக்கினார். மேலும், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட சிலர் நேரடியாக செய்தியாளர் சந்திப்பில் பேசினர். ராகுல் காந்தி வாக்குத்திருட்டு பிரச்சினை இந்திய ஜனநாயகத்திற்கு பெரிய அச்சுறுத்தல் என்றார்.