விலை உயர்ந்த வைர நகைகள், சோலார் பேனல்: இந்திய மகளிர் அணிக்கு மழையாய் பரிசுகள்
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையில் இந்திய அணி சாம்பியன் பட்டம் கைப்பற்றியதை அடுத்து, வீராங்கனைகளுக்கு பரிசுகள் தொடர்ச்சியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான அணிக்கு ரூ.51 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா நேற்று அறிவித்தார். இந்த தொகை அனைத்து வீராங்கனைகள், பயிற்சியாளர் குழு, தேர்வுக்குழுவினர் உள்ளிட்டோருக்கு சமமாகப் பகிரப்படும்.
இதற்கிடையில், வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா சிங் தாக்கூருக்கு இமாச்சல் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு ரூ.1 கோடி பரிசளிப்பதாக அறிவித்தார். சிம்லா மாவட்டம் ரோஹ்ருவைச் சேர்ந்த அவருக்கு இந்த ஊக்கத்தொகை அளிக்கப்படுகிறது. அதேபோல், மத்திய பிரதேசத்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் கிரந்தி கவுடுக்கும் அதே அளவு பரிசுத் தொகையை மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் அறிவித்துள்ளார்.
மேலும், உலகக் கோப்பை வென்ற இந்திய மகளிர் அணியின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் வைரநகைகள் மற்றும் அவர்களின் வீடுகளுக்கு சோலார் பேனல்கள் வழங்குவதாக சூரத்திலுள்ள தொழிலதிபர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினரான கோவிந்த் தோலாகியா அறிவித்துள்ளார்.
பிசிசிஐக்கு அனுப்பிய கடிதத்தில், “இந்திய மகளிர் அணியின் ஒவ்வொரு வீராங்கனைக்கும் சிறப்புப் பரிசாக வைர நகை வழங்கி, அவர்களின் இல்லங்களுக்கு சோலார் பேனல் அமைக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.