பிஹாரில் பெண்களின் வாக்குப்பதிவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு பாஜக பெண் தொண்டர்களுக்கு மோடி அறிவுறுத்தல்
பிஹாரில் பெண்கள் அதிக அளவில் வாக்களிப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்று பாஜக பெண் தொண்டர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தினார்.
பிஹார் சட்டப்பேரவை முதல் கட்டத் தேர்தல் பிரச்சாரம் மாலை 5 மணியுடன் நிறைவடைந்த நிலையில், பாஜக பெண் நிர்வாகிகளுடன் வீடியோ வழி உரையாடிய பிரதமர் மோடி, “பாஜக தொண்டர்களின் கடின உழைப்பால், ஒவ்வொரு பொதுக்கூட்டத்திலும் புதிய சாதனைகள் உருவாகின்றன. பெண்கள் அதிகமாக பங்கேற்கின்றனர்” என்று தெரிவித்தார்.
மேலும், “பிஹாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வரும் என்பது உறுதி. வளர்ச்சியும் நல்லாட்சியும் மீண்டும் தொடரும். பெண்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும் அவர்களுக்கு அதிகாரம் வழங்கவும் எங்களது அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. மின்சார கட்டணம் குறைக்கப்பட்டு, இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது; மெட்ரோ ரயில் நிலையங்கள் போன்ற முக்கிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன,” என்றும் குறிப்பிட்டார்.
காட்டாட்சி காலத்தில் பெண்களுக்கு ஏற்பட்ட அச்சம் இப்போது இல்லை என்றும், “பெண்கள் காட்டாட்சிக்கு எதிராக ஒரு சுவர்போல் நிற்கிறார்கள். காட்டாட்சி காலத்தை உருவாக்கியவர்கள் பெண்களிடம் இப்போது வாக்குறுதிகளை வழங்கிக் கொண்டிருக்கின்றனர்,” என்று மோடி விமர்சித்தார்.