கன்னட நடிகர் தர்ஷன் மீது கொலை வழக்கு: நவம்பர் 10-ல் விசாரணை ஆரம்பம்
ரேணுகாசுவாமி மரணம் தொடர்பான வழக்கில் நடிகர் தர்ஷன், அவரது காதலி பவித்ரா கவுடா உள்ளிட்ட 17 பேருக்கு எதிராக பெங்களூர் 64-வது அமர்வு நீதிமன்றம் இன்று கொலை, குற்றவியல் சதி, கடத்தல் போன்ற குற்றப்பிரிவுகளை அமல்படுத்தியது. குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் தாங்கள் குற்றமற்றவர்கள் என நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இதையடுத்து, வழக்கின் முறையான விசாரணை நவம்பர் 10-ஆம் தேதி தொடங்கவுள்ளது.
தனது ரசிகரான ரேணுகாசுவாமி சமூக வலைதளத்தில் பவித்ரா கவுடாவை அவதூறு செய்ததால், அவரை கடத்தி தாக்கி கொலை செய்ததாகக் கூறப்படும் இந்த வழக்கில், தர்ஷன் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். இதே வழக்கில் பவித்ரா கவுடா மற்றும் பவுன்சர்கள் உள்பட பலரும் கைது செய்யப்பட்டனர்.
தர்ஷனுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி கர்நாடக உயர்நீதிமன்றம் ஜாமீன் அளித்தது. இதற்கு எதிராக மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. உச்ச நீதிமன்றம் அந்த ஜாமீனை ரத்து செய்ததைத் தொடர்ந்து, இந்த ஆண்டு ஆகஸ்டில் தர்ஷன் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
இன்று நடைபெற்ற நீதிமன்ற அமர்வில் பெரும் கூட்டம் காணப்பட்டது. இதனால், நீதிபதி ஐ.பி. நாயக் அதிருப்தி தெரிவித்தார். தொடர்பில்லாத வழக்கறிஞர்கள் வெளியேற வேண்டும் என்றும், இல்லையெனில் விசாரணை ஒத்திவைக்கப்படும் என்றும் எச்சரித்தார்.
முதல் குற்றம்சாட்டப்பட்டவரான பவித்ரா கவுடா மீது உள்ள குற்றச்சாட்டுகளை நீதிபதி வாசித்தார். குற்றப்பத்திரிகையில், பவித்ரா ரேணுகாசுவாமியை செருப்பால் தாக்கியதாகவும், தர்ஷன் அவரை தாக்கியதால் அவர் இறந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
17 பேரும் குற்றச்சாட்டுகளை மறுத்ததையடுத்து, வழக்கு தொடர்ந்தும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. பின்னர் தர்ஷன், பவித்ரா உள்ளிட்டோர் மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். நீதிமன்றம் விசாரணையை நவம்பர் 10-ம் தேதி தொடர முடிவு செய்துள்ளது.