ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் வான்தாக்குதல் – 3 கிரிக்கெட் வீரர்கள் உட்பட 8 பேர் உயிரிழப்பு
ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில், ஆப்கான் கிரிக்கெட் வீரர்கள் மூவர் உட்பட எட்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ள பாக்டிகா மாகாணத்தின் உர்குன் மற்றும் பார்மல் மாவட்டங்களில் இந்த தாக்குதல் நடந்தது. மக்கள் குடியிருப்பு பகுதிகள் குறிவைக்கப்பட்டதாக ஆப்கான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (ACB) வெளியிட்ட அறிக்கையில், “எங்கள் வீரர்கள் நட்பு போட்டியில் பங்கேற்க ஷரானா சென்றுவிட்டு உர்குன் திரும்பியபோது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் கபீர், சிப்கதுல்லா, ஹாரூன் ஆகியோர் உட்பட எட்டு பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் கோழைத்தனமானது,” என கண்டனம் தெரிவித்துள்ளது.
தாக்குதலை அடுத்து, பாகிஸ்தான் மற்றும் இலங்கையுடன் அடுத்த மாதம் நடைபெறவிருந்த முத்தரப்பு டி20 தொடரில் இருந்து ஆப்கானிஸ்தான் விலகுவதாக ACB அறிவித்துள்ளது. உயிரிழந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
ஆப்கான் டி20 அணியின் கேப்டன் ரஷீத் கான் தாக்குதலை கடுமையாக கண்டித்து, “இது மனிதாபிமானமற்ற செயல்” என்று தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான், “தீவிரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தான் ஆதரவு வழங்குகிறது” என குற்றம் சாட்டி வரும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே கடந்த வாரம் எல்லை பகுதியில் கடும் மோதல் நடைபெற்றது. பின்னர் 48 மணி நேர சண்டை நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால், அந்த ஒப்பந்தத்தைக் மீறியே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ஆப்கானிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.