இந்தியாவில் உருவான புதிய தலைமுறை இதய ஸ்டென்டுக்கு உலகத்தர அங்கீகாரம்
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற உலக இதய சிகிச்சை நிபுணர்கள் மாநாடு சமீபத்தில் நிறைவடைந்தது. இந்த மாநாட்டில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட புதிய தலைமுறை இதய ஸ்டென்ட் உலகளாவிய பாராட்டைப் பெற்றது.
டெல்லி பத்ரா மருத்துவமனையின் டீனும், பிரபல இதய சிகிச்சை நிபுணருமான டாக்டர் உபேந்திர கவுல் தலைமையில் நடத்தப்பட்ட ‘டுக்ஸ்டோ–2’ ஆராய்ச்சி முடிவுகள் இந்த மாநாட்டில் வெளியிடப்பட்டன. ஆராய்ச்சி குழுவில் பெங்களூரின் டாக்டர் பால் துணைத் தலைவராகவும், டாக்டர் பிரியதர்ஷினி திட்ட இயக்குனராகவும் பணியாற்றினர்.
இந்த பரிசோதனையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ‘சுப்ராப்ளக்ஸ் க்ரஸ்’ ஸ்டென்ட் மற்றும் அமெரிக்காவின் முன்னணி நிறுவனமான ‘ஜீயன்ஸ்’ ஸ்டென்ட் இடையே நேரடி ஒப்பீடு செய்யப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது.
டாக்டர் கவுல் கூறியதாவது:
- இந்தியாவின் 66 இதய சிகிச்சை மையங்களில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
- நீரிழிவு நோயுடன், இதயத்தின் 3 முக்கிய ரத்த நாள்களிலும் அடைப்பு உள்ள நோயாளிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
- இதில் 80% நோயாளிகளுக்கும் மூன்றும் முக்கிய ரத்த நாள்களிலும் அடைப்பு இருந்தது.
- இந்த நோயாளிகளுக்குப் புதிய இந்திய ஸ்டென்ட் பொருத்தப்பட்டு பரிசோதனை நடைபெற்றது.
இந்த ஆய்வு மூலம், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ‘சுப்ராப்ளக்ஸ் க்ரஸ்’ ஸ்டென்ட், சர்வதேச தரத்திலான ஸ்டென்ட்டுகளுக்கு எந்தவிதத்திலும் குறையற்றது என்பதை நிரூபிக்கப்பட்டது. குறிப்பிடத்தக்கது என்னவெனில், இந்த ஸ்டென்ட் குஜராத் மாநிலம் சூரத்தில் தயாரிக்கப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.