காற்று மாசை கட்டுப்படுத்த டெல்லியில் செயற்கை மழை!
கான்பூர் ஐஐடி உதவியுடன் மேக விதைப்பு நடைமுறை வெற்றி
டெல்லி: தலைநகர் டெல்லியில் பரவி வரும் கடுமையான காற்று மாசை கட்டுப்படுத்தும் முயற்சியாக, நேற்று செயற்கை மழை பெய்விக்கப்பட்டது.
கடந்த சில வாரங்களாக டெல்லி முழுவதும் காற்று மாசு அளவு ஆபத்தான நிலையில் உள்ளது. நேற்று வெளியிடப்பட்ட தரவின்படி, காற்று தரக் குறியீடு (AQI) 315 என பதிவாகியது. இது “மிகவும் மோசமான நிலை” என வகைப்படுத்தப்படுகிறது.
இதனால் குடிமக்களின் உடல் நலம் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இதையடுத்து, டெல்லி முதல்வர் ரேகா குப்தா தலைமையிலான அரசு, காற்று மாசை குறைக்கும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கட்டுமானப் பணிகளில் தூசி பரவாமல் இருக்க கடுமையான விதிமுறைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. மேலும், வரும் நவம்பர் 1 முதல் பிஎஸ்-6 சரக்கு வாகனங்கள் மட்டுமே டெல்லிக்குள் அனுமதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், காற்று மாசை குறைக்கும் புதிய முயற்சியாக செயற்கை மழை (Artificial Rain) பெய்விக்க தீர்மானிக்கப்பட்டது. இதற்காக கான்பூர் இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (IIT Kanpur) உதவி பெறப்பட்டது.
நேற்று, கான்பூரிலிருந்து செஸ்னா வகை விமானம் டெல்லிக்கு புறப்பட்டது. சுமார் 6,000 அடி உயரத்தில் பறந்த அந்த விமானம், டெல்லியின் புராரி, விஹார், கரோல் பாக் உள்ளிட்ட பகுதிகளில் மேகங்கள் மீது சில்வர் அயோடைடு, சோடியம் குளோரைடு, பொட்டாசியம் அயோடைடு போன்ற ரசாயனங்கள் தெளித்தது.
இதன் விளைவாக, மேகக் கூட்டங்கள் நீர்த்துளிகளாக மாறி பல பகுதிகளில் மழை பெய்தது.
கான்பூர் ஐஐடி பேராசிரியர்கள் தெரிவித்ததாவது:
“செயற்கை மழை பெய்விக்க போதுமான மேகங்கள் தேவைப்படும். சாதகமான வானிலை நிலவும்போது நவம்பர் 30 வரை இந்த முயற்சி தொடரும். இதன் மூலம் டெல்லியின் காற்று மாசு கட்டுப்படுத்தப்படும்,” என தெரிவித்தனர்.
இந்த முயற்சி வெற்றியடைந்தால், இந்தியாவின் பிற மாசடைந்த நகரங்களிலும் இதே மாதிரி செயற்கை மழை முயற்சி மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.