மேற்குவங்கத்தில் மம்தாவுக்கு அடுத்தடுத்து பேரதிர்ச்சி: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 3-ஆவது எம்பி பிரகாஷ் சிக் பராக் அதிரடி ராஜினாமா!
மேற்குவங்க சட்டசபைத் தேர்தல் தோல்வியின் எதிரொலியாக, முன்னாள் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் (TMC) கட்சி கடுமையான உட்கட்சிப் பூசலால் நிலைகுலைந்து வரும் சூழலில், அக்கட்சியின் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் (Rajya Sabha MPs) அடுத்தடுத்து தங்களது பதவிகளை ராஜினாமா செய்து வருவது தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கடந்த ஜூன் 8-ஆம் தேதியன்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த மாநிலங்களவை எம்பியான சுகேந்து சேகர் ராய் தனது பதவியை ராஜினாமா செய்ததோடு, கட்சியிலிருந்தும் அதிகாரப்பூர்வமாக விலகினார். அவரைத் தொடர்ந்து, மற்றொரு முக்கிய பெண் எம்பியான சுஷ்மிதா தேவ்வும் தனது பதவியைத் துறந்து கட்சியிலிருந்து வெளியேறினார். இந்த அடுத்தடுத்த அதிர்ச்சிகளில் இருந்தே மீளாத மம்தா பானர்ஜிக்கு, தற்போது 3-ஆவது நபராக எம்பி பிரகாஷ் சிக் பராக் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை அதிரடியாக ராஜினாமா செய்திருப்பது பேரிடியாக அமைந்துள்ளது.
இந்தத் தொடர் ராஜினாமக்களின் காரணமாக, நாடாளுமன்ற மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பலம் மற்றும் எம்பிக்களின் எண்ணிக்கை கணிசமாகச் சரிந்து தற்போது 10-ஆகக் குறைந்துள்ளது. மேற்குவங்க அரசியல் அரங்கில் மம்தா பானர்ஜியின் ஆதிக்கம் சரிந்து வருவதையே இந்த அடுத்தடுத்த விலகல்கள் காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். மேலும், அதிருப்தியில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மேலும் 3 எம்பிக்கள் வரை அடுத்த வாரத்திற்குள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும், இது மம்தா பானர்ஜிக்கு மீள முடியாத அரசியல் நெருக்கடியையும் பலவீனத்தையும் ஏற்படுத்தும் என்றும் அக்கட்சியின் உள்வட்டாரத் தகவல்கள் கசிந்து வருகின்றன.





