ரத்தான நீட் தேர்வு: கட்டணத்தை திரும்பப் பெற இணையதளப் பக்கம் வெளியீடு – மே 27-க்குள் விண்ணப்பிக்க தேசிய தேர்வுகள் முகமை (NTA) அறிவிப்பு!
புதுடெல்லி: வினாத்தாள் முன்கூட்டியே கசிந்த விவகாரத்தால் கடந்த மே 3-ஆம் தேதி நாடு முழுவதும் நடத்தப்பட்ட நீட் (NEET UG 2026) தேர்வு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மாணவர்கள் தங்களின் தேர்வுப் பதிவுக்கட்டணத்தை முழுமையாகத் திரும்பப் பெறுவதற்கான (Fee Refund) பிரத்யேக இணையதளப் பக்கத்தைத் தேசிய தேர்வுகள் முகமை (NTA) தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் சுமார் 22 லட்சத்திற்கும் அதிகமான மருத்துவப் படிப்பு ஆர்வலர்களைப் பாதித்த இந்தத் தேர்வு ரத்து நடவடிக்கையை அடுத்து, மாணவர்களுக்கு நிவராணம் அளிக்கும் வகையில் இந்த நிதித் திருப்பச் செலுத்தும் வசதி ஆன்லைனில் தொடங்கப்பட்டுள்ளது.
பொதுவாகப் பணம் செலுத்திய கணக்கிற்கே தொகை திருப்பி அனுப்பப்படும் (Direct Reversal) நடைமுறைக்கு மாறாக, கிராமப்புற மற்றும் நகர்ப்புற மாணவர்கள் பலர் இணைய மையங்கள் (Cyber Cafes) மூலமாகக் கட்டணம் செலுத்தியிருப்பார்கள் என்பதைக் கருத்தில் கொண்டு, மாணவர்கள் தங்களின் சொந்த அல்லது பெற்றோரின் வங்கி விவரங்களை நேரடியாகப் பதிவிட இந்தத் தனிப்பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பாதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் அனைவரும் NTA-வின் அதிகாரப்பூர்வ இணையதளமான neet.nta.nic.in என்ற பக்கத்திற்குச் சென்று, தங்களது நீட் விண்ணப்ப எண் (Application Number) மற்றும் கடவுச்சொல்லைப் (Password) பயன்படுத்தி உள்நுழைந்து (Login), தங்களின் சரியான வங்கிச் கணக்கு எண், கணக்கு வைத்துள்ளவரின் பெயர் மற்றும் ஐஎப்எஸ்சி (IFSC Code) குறியீடு ஆகிய விபரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். இந்தத் தேர்வுக்கான கட்டணத் தொகையைத் திரும்பப் பெற விரும்பும் மாணவர்கள், வரும் மே 27-ஆம் தேதி நள்ளிரவு 11:50 மணி வரை மட்டுமே இணையதளத்தில் விண்ணப்பிக்க முடியும் எனக் காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜூன் 21 அன்று நடைபெற உள்ள நீட் மறுதேர்வுக்கு (Re-NEET) மாணவர்கள் எந்தவொரு கூடுதல் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை என்றும், பழைய தரவுகளின் அடிப்படையிலேயே அவர்கள் தேர்வெழுத அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தேசிய தேர்வுகள் முகமை தெளிவுபடுத்தியுள்ளது.





