நீட் வினாத்தாள் கசிவு எதிரொலி: தேர்வு ரத்து; இருவர் கைது – சிபிஐ அதிரடி விசாரணை!
புதுடெல்லி: நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நீட் (NEET) வினாத்தாள் கசிவு விவகாரத்தில், இருவரை கைது செய்துள்ள சிபிஐ அதிகாரிகள் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
கடந்த மே 3-ம் தேதி நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வை சுமார் 23 லட்சம் மாணவர்கள் எழுதினர். இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம் சீகர் பகுதியில் வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததாகப் புகார்கள் எழுந்தன. ஒரு வினாத்தாள் சுமார் 28 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டதாகவும், ஒட்டுமொத்தமாக 100 கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடாகப் பணம் வசூலிக்கப்பட்டதாகவும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இதனைத் தொடர்ந்து, முறைகேடு நடந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனப் பெற்றோர்களும், அரசியல் கட்சியினரும் விடுத்த கோரிக்கையை ஏற்று, மே 3-ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்வதாகத் தேசிய தேர்வு முகமை (NTA) அறிவித்துள்ளது. மறுதேர்வு குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, மத்திய உயர்கல்வித்துறை அளித்த புகாரின் பேரில் சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. இதில் தொடர்புடையதாகக் கருதப்படும் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த முறைகேட்டில் பின்னணியில் உள்ள மற்ற நபர்களைக் கண்டறிய விசாரணை மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.





