சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவில் புதிய மாற்றங்கள்: நாளை (மே 1) முதல் அமலுக்கு வருகிறது!
எல்பிஜி (LPG) சமையல் எரிவாயு சிலிண்டர்களை முன்பதிவு செய்யும் முறையில் நாளை முதல் புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வரவுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. புதிய விதிமுறையின்படி, சிலிண்டர் முன்பதிவு செய்வதற்கான கால இடைவெளி மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, நகரப் பகுதிகளில் சிலிண்டர் முன்பதிவு செய்யக் குறைந்தபட்சம் 21 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும் என்ற நிலை மாறி, இனி 25 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், கிராமப் பகுதிகளில் இந்த கால வரம்பு 45 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், சிலிண்டர் விநியோகத்தின் போது பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்ய ஏற்கனவே சோதனை முறையில் இருந்த ஓடிபி (OTP) அடிப்படையிலான விநியோக முறை இனி நிரந்தரமாக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன், உஜ்வாலா திட்ட பயனாளர்கள் ஒவ்வொரு நிதியாண்டின் தொடக்கத்திலும் தங்களது பயோமெட்ரிக் (Biometric) தகவல்களை உறுதி செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் அனைத்தும் நுகர்வோர் மற்றும் விநியோகஸ்தர்களுக்குத் தெளிவான வழிகாட்டுதலை வழங்கும் நோக்கில் கொண்டு வரப்பட்டுள்ளன.




