மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல்: முதற்கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பு – பாதுகாப்பு பலப்படுத்தல்
கொல்கத்தா: 294 தொகுதிகளைக் கொண்ட மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக 152 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், பொதுமக்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் தங்களது வாக்குகளைப் பதிவு செய்து வருகின்றனர்.
இந்த முதற்கட்ட தேர்தலில் மொத்தம் 3 கோடியே 60 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இதில் 1 கோடியே 84 லட்சம் ஆண்களும், 1 கோடியே 75 லட்சம் பெண்களும் மற்றும் 465 மூன்றாம் பாலினத்தவர்களும் அடங்குவர். வாக்காளர்கள் எவ்வித சிரமமுமின்றி வாக்களிக்க ஏதுவாக மொத்தம் 44 ஆயிரத்து 376 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பொறுத்தவரை, மொத்தமுள்ள வாக்குச்சாவடிகளில் 8 ஆயிரத்துக்கும் அதிகமானவை பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. அங்கு அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் தடுக்க கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக மட்டும் சுமார் 2 ஆயிரத்து 450 துணை ராணுவப்படையினர் மாநிலம் முழுவதும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.




