ஈரான் மீது இரு வாரங்களுக்குத் தாக்குதல் இல்லை: போரைத் தவிர்க்க ட்ரம்ப் அதிரடி முடிவு!
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஈரான் மீதான ராணுவத் தாக்குதல்களை அடுத்த இரண்டு வாரங்களுக்கு நிறுத்தி வைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார். உலகப் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) உடனடியாகத் திறக்க வேண்டும் என ஈரானுக்குத் தொடர்ச்சியாகக் கெடு விதித்து வந்த ட்ரம்ப், அந்த நிபந்தனையை ஈரான் ஏற்றுக்கொண்டால் மட்டுமே இந்தத் தாக்குதல் நிறுத்தம் அமலில் இருக்கும் என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
முன்னதாக, ஈரான் உரிய முடிவை எடுக்காவிட்டால் அந்நாட்டின் நாகரிகமே அழிய நேரிடும் என்றும், மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பாலங்கள் தரைமட்டமாக்கப்படும் என்றும் ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கை அணு ஆயுதப் போர் குறித்த அச்சத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் உள்ளிட்ட உலகத் தலைவர்களின் கோரிக்கையை ஏற்று, பேச்சுவார்த்தைக்காக இந்தக் கால அவகாசத்தை அவர் வழங்கியுள்ளார். மேலும், போரை முடிவுக்குக் கொண்டு வர ஈரான் முன்மொழிந்துள்ள 10 அம்ச அமைதித் திட்டத்தை “ஆக்கப்பூர்வமானது” என வரவேற்றுள்ள ட்ரம்ப், அடுத்த 14 நாட்களில் இதற்கான இறுதி ஒப்பந்தம் எட்டப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.






