கோவாவில் பகீர்: பாராசெயிலிங் செய்தபோது 50 அடி உயரத்தில் இருந்து கடலில் விழுந்த சுற்றுலா பயணி!
கோவாவின் பிரபல கடற்கரை ஒன்றில் பாராசெயிலிங் விளையாட்டில் ஈடுபட்டிருந்த சுற்றுலா பயணி ஒருவர், அந்தரத்தில் பறந்து கொண்டிருந்தபோது கயிறு அறுந்து கடலில் விழுந்த பதறவைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. வானத்தில் சுமார் 50 அடிக்கும் அதிகமான உயரத்தில் பாராசூட் மூலம் பறந்து கொண்டிருந்தபோது, படகுடன் இணைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு கயிறு எதிர்பாராதவிதமாகப் பாதியிலேயே அறுந்தது. இதனால் நிலைதடுமாறிய பாராசூட், நேராகக் கடலுக்குள் விழுந்தது.
இந்த விபத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்த மீட்புக்குழுவினர் மற்றும் படகோட்டிகள், உடனடியாகச் செயல்பட்டு கடலில் விழுந்த நபரை விரைந்து சென்று மீட்டனர். நல்வாய்ப்பாக, அந்தச் சுற்றுலா பயணி எவ்விதப் பெரிய காயங்களுமின்றி உயிர் தப்பினார். சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ள இந்தச் சம்பவம், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.






