ஜெய்ப்பூரில் புகைப்படத்திற்காக யானைக்கு இளஞ்சிவப்பு நிறம்: ரஷ்யப் பெண் கலைஞரின் செயலுக்கு விலங்கு நல ஆர்வலர்கள் கடும் கண்டனம்!
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், புகைப்படம் எடுப்பதற்காக யானை ஒன்றிற்கு இளஞ்சிவப்பு (Pink) நிறம் பூசிய ரஷ்யப் புகைப்படக் கலைஞர் ஜூலியா புருலேவாவின் செயல் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஜெய்ப்பூர் நகரின் அடையாளமான இளஞ்சிவப்பு நிறத்தைப் பிரதிபலிக்கும் வகையில், யானையின் உடல் முழுவதும் அந்த நிறத்தைப் பூசி, அதன் மீது மாடல் அழகி ஒருவரை அமரவைத்து ஜூலியா புகைப்படம் எடுத்துள்ளார். இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் வைரலானதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் மற்றும் விலங்கு நல ஆர்வலர்கள் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
யானைகளின் தோல் மிகவும் மென்மையானது மற்றும் நுண்துளைகள் கொண்டது என்பதால், ரசாயன வண்ணங்களைப் பூசுவது அவற்றின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் என்றும், இது ஒரு வகை ‘விலங்கு வதை’ என்றும் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த விமர்சனங்களுக்குப் பதிலளித்துள்ள ஜூலியா, தான் பயன்படுத்தியது முற்றிலும் இயற்கையான, நச்சுத்தன்மையற்ற வண்ணம் என்றும், இதனால் யானைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார். இருப்பினும், அழகிற்காக வாயில்லா ஜீவன்களை இதுபோன்று காட்சிப்படுத்துவது தவறான முன்னுதாரணம் எனப் பலரும் சாடி வருகின்றனர்.






