எரிபொருள் தட்டுப்பாடு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்: மத்திய அரசு முக்கிய வேண்டுகோள்!
நாட்டில் பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி (LPG) உருளைகளின் கையிருப்பு குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் வதந்திகளைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று மத்திய அரசு அதிரடியாகத் தெரிவித்துள்ளது. மேற்காசியாவில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக உலக அளவில் எரிவாயு விநியோகச் சங்கிலியில் பாதிப்பு ஏற்பட்டுள்ள போதிலும், இந்தியாவில் எரிபொருட்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக அரசு உறுதியளித்துள்ளது.
தேவையற்ற அச்சத்தின் காரணமாகப் பெட்ரோல் மற்றும் டீசலை அதிக அளவில் வாங்கிச் சேமிக்க வேண்டாம் என்றும், அவசரப்பட்டு எல்பிஜி சிலிண்டர்களை முன்பதிவு செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, எல்பிஜி முன்பதிவு செய்ய விரும்பும் வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் முறைகளைப் பயன்படுத்துமாறும், எரிவாயு விற்பனை நிலையங்களுக்கு நேரடியாகச் செல்வதைத் தவிர்க்குமாறும் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. வதந்திகளால் ஏற்படும் தேவையற்ற கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், விநியோகத்தை முறைப்படுத்தவும் இந்த வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.










