தேர்தல் களம் 2026: புதுச்சேரி, கேரளா, அசாமில் 2,140 வேட்பாளர்கள் போட்டி – தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
புதுச்சேரி யூனியன் பிரதேசம் மற்றும் கேரளா, அசாம் ஆகிய மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுப் பரிசீலனைப் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன. இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, இந்த மூன்று மாநிலங்களிலும் உள்ள மொத்தம் 296 சட்டமன்றத் தொகுதிகளில் 2,140 வேட்பாளர்கள் தற்போது தேர்தல் களத்தில் உள்ளனர்.
இதில் கேரளாவில் உள்ள 140 தொகுதிகளுக்கு 985 வேட்பாளர்களும், அசாம் மாநிலத்தின் 126 தொகுதிகளுக்கு 789 வேட்பாளர்களும், புதுச்சேரியின் 30 தொகுதிகளுக்கு 366 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். இந்த மாநிலங்களில் வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 16-ஆம் தேதி தொடங்கி 23-ஆம் தேதியுடன் முடிவடைந்தது.
கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற மனுப் பரிசீலனைக்குப் பிறகு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. வேட்புமனுக்களைத் திரும்பப் பெற இன்று மாலை வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில், அதன் பிறகு இறுதிப் போட்டிப் பட்டியல் மற்றும் சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு தேர்தல் களம் மேலும் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.









