தெருநாய் பிரச்சனை: தமிழகம் உள்பட 25 மாநில தலைமைச் செயலாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு
நாடு முழுவதும் நாய்க்கடி மற்றும் ரேபிஸ் நோயால் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், தெருநாய் பிரச்சனை தொடர்பாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யாத தமிழ்நாடு உள்பட 25 மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் வரும் நவம்பர் 3ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கை நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
முன்னதாக, கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி, உச்ச நீதிமன்றம் டெல்லி, டெல்லி மாநகராட்சி மற்றும் என்எம்டிசிக்கு, நகரின் அனைத்து தெருநாய்களையும் பிடித்து காப்பகங்களில் அடைக்க வேண்டும் எனவும், அந்தக் காப்பகங்களில் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது.
அத்தீர்ப்பு விலங்குகள் நல ஆர்வலர்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா, என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய புதிய அமர்வு அந்த உத்தரவைக் காலவரையின்றி நிறுத்திவைத்தது. மேலும், தெருநாய்களின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் விதிகளின் கீழ் மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து, அதுகுறித்த பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி அறிவுறுத்தியது.
இந்நிலையில் இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மேற்கு வங்கம், தெலங்கானா, டெல்லி மாநகராட்சி தவிர மற்ற மாநிலங்கள் இதுவரை பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவில்லை என நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.
அது குறித்து நீதிபதிகள்,
“இந்த அலட்சியம், சர்வதேச அளவில் இந்தியாவை பற்றி தவறான கருத்தை உருவாக்கும். சட்டநடவடிக்கையை அவமதிப்பதாகும்” என கடும் அதிருப்தி தெரிவித்தனர்.
அதனால், பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யாத மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் நவம்பர் 3ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்றும்,
“அவ்வாறு ஆஜராகவில்லை என்றால், நீதிமன்றத்தை நாங்கள் ஆடிட்டோரியத்திலேயே நடத்துவோம்” என கடுமையான எச்சரிக்கை விடுத்தனர்.