கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயில் தூக்க நேர்ச்சை: விடிய விடிய நடைபெற்ற பச்சிளம் குழந்தைகளுக்கான நேர்ச்சைத் திருவிழா!
கன்னியாகுமரி:
கன்யாகுமரி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயிலில், ஆண்டுதோறும் நடைபெறும் வரலாற்றுச் சிறப்புமிக்க தூக்க நேர்ச்சைத் திருவிழா விடிய விடிய நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் மீனபரணி நட்சத்திரத்தன்று பச்சிளம் குழந்தைகளுக்கான இந்தத் தூக்க நேர்ச்சை வழிபாடு நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், நேற்று அதிகாலை தொடங்கிய இந்த நேர்ச்சை நிகழ்வு, இன்று அதிகாலை வரை இடைவிடாமல் நடைபெற்றது. குழந்தை வரம் வேண்டி நின்ற தம்பதியர், தங்கள் வேண்டுதல் நிறைவேறியதை அடுத்து, குழந்தைகளுக்கு இந்தத் தூக்க நேர்ச்சை வழிபாட்டைச் செலுத்தி அம்மனுக்கு நன்றி தெரிவித்தனர்.
மேலும், குழந்தைகள் நோய்நொடியின்றி நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியத்துடனும் வாழ வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் ஏராளமான பெற்றோர்கள் இதில் பங்கேற்றனர். தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களின் பல்வேறு பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் இந்தக் கண்கவர் திருவிழாவில் கலந்துகொண்டு அம்மனைத் தரிசித்தனர்.










