திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் நிகழ்ந்த அந்த அபூர்வ நிகழ்வு
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் அதிசயம்: மூலவர் திருமேனியைத் தழுவிய சூரியக் கதிர்கள்!
கன்னியாகுமரி மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில், ஆண்டுக்கு இருமுறை நிகழும் அரிய நிகழ்வான ‘சூரிய ஒளி வழிபாடு’ நேற்று நடைபெற்றது. நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இக்கோவிலில், பங்குனி மற்றும் புரட்டாசி மாதங்களின் தொடக்கத்தில் மறையும் சூரியனின் பொன்னிறக் கதிர்கள் கருவறைக்குள் புகுந்து பள்ளிகொண்ட பெருமாளின் திருமேனியைத் தழுவும் வகையில் கோவில் கட்டமைப்பு அமையப்பெற்றுள்ளது.
அந்த வகையில், பங்குனி மாதம் 5-ஆம் நாளான நேற்று மாலை, சூரியனின் மஞ்சள் நிறக் கதிர்கள் சபா மண்டபம் மற்றும் உதயமார்த்தாண்ட மண்டபங்களைக் கடந்து, கருவறையில் அனந்த சயன கோலத்தில் வீற்றிருக்கும் ஆதிகேசவ பெருமாளின் திருமேனி மீது விழுந்தன. கண்களைக் கூசச் செய்யும் வகையில் அமைந்த இந்த அபூர்வக் காட்சியைக் கண்ட திரளான பக்தர்கள் ‘கோவிந்தா’ முழக்கமிட்டுப் பரவசமடைந்தனர்.
இந்த அதிசய நிகழ்வு இன்றும் (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணி அளவில் நிகழும் என்பதால், இதைக் காண்பதற்காகப் பல்வேறு ஊர்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் திருவட்டார் கோவிலில் குவிந்து வருகின்றனர். பொதுவாக பங்குனி மற்றும் புரட்டாசி மாதங்களில் 3-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை மட்டுமே நிகழும் இந்த அபூர்வக் காட்சி, தமிழர்களின் கட்டடக்கலை மற்றும் வானியல் அறிவுக்குச் சான்றாகத் திகழ்கிறது.
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் அதிசயம் மூலவர் திருமேனியைத் தழுவிய சூரியக் கதிர்கள்!








