பிரதமர் மோடியுடன் தொலைபேசி உரையாடலுக்காக அமைச்சரவை கூட்டத்தை நிறுத்திய நெதன்யாகு
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசி மூலம் பேசுவதற்காக, காசா அமைதி ஒப்பந்தம் குறித்த பாதுகாப்பு அமைச்சரவை கூட்டத்தை நடுவே நிறுத்தினார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் முன்மொழிந்த 20 அம்ச கொண்ட இஸ்ரேல்–காசா அமைதி திட்டம் தொடர்பாக எகிப்தில் சமீபத்தில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் இரு தரப்பும் உடன்பாட்டை எட்டியிருந்தன. அதன் படி, உயிருடன் உள்ள இஸ்ரேல் பிணைக் கைதிகள் விடுவிக்கப்படுவர்; உயிரிழந்த கைதிகளின் உடல்களும் இஸ்ரேலுக்கு திருப்பி அளிக்கப்படும்.
இந்த ஒப்பந்தத்தை மதிப்பாய்வு செய்ய நெதன்யாகு பாதுகாப்பு அமைச்சரவை கூட்டத்தை கூட்டியிருந்தார். அப்போது பிரதமர் மோடியின் அழைப்பு வந்ததால், அவர் கூட்டத்தை சில நேரம் நிறுத்தி மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பிரதமர் மோடி, எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்,
“எனது நண்பர், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் தொலைபேசியில் பேசினேன். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முன்வைத்த காசா அமைதி முயற்சியில் ஏற்பட்ட முன்னேற்றத்துக்கு வாழ்த்து தெரிவித்தேன். காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை விரிவாக்கும் ஒப்பந்தத்தை வரவேற்கிறோம். தீவிரவாதம் எந்த வடிவிலும் ஏற்க முடியாது,”
என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல், இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில்,
“பிரதமர் நெதன்யாகு, இந்திய பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பிணைக் கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தம் எட்டப்பட்டதற்காக மோடி வாழ்த்து தெரிவித்தார்,”
என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், காசா அமைதி ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் அரசு அதிகாரப்பூர்வ ஒப்புதல் அளித்துள்ளது. உடனடியாக சண்டை நிறுத்தம் அமலுக்கு வரும் என்றும், இஸ்ரேல் படைகள் விரைவில் காசா பகுதிகளில் இருந்து பின்வாங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.