டெல்லியில் தாக்குதல் திட்டம்: ஐஎஸ்ஐஎஸ் தொடர்பில் 2 பேர் கைது
டெல்லியில் தீபாவளி நாளில் பெரிய அளவிலான தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்த 2 தீவிரவாதிகள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து டெல்லி காவல் துறை கூடுதல் ஆணையர் பிரமோத் குஷ்வாஹா தெரிவித்ததாவது:
“அக்.16 அன்று அட்னான் என்ற ஒருவரை டெல்லி சதிக் நகரில் கைது செய்தோம். அதே பெயரில் மற்றொருவரை மத்திய பிரதேசம், போபாலில் கைது செய்துள்ளோம். ஆரம்பகட்ட விசாரணையில், இவர்கள் ஐஎஸ்ஐஎஸ் (ISIS) தீவிரவாத அமைப்புடன் நேரடி தொடர்பு கொண்டவர்கள் என்பதும், தீபாவளி நாளில் டெல்லியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததும் உறுதியாகியுள்ளது,” என்றார்.
இவர்கள் தெற்கு டெல்லி பகுதியில் உள்ள சில வணிக வளாகங்கள், பூங்காக்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் முன் ஆய்வுகள் செய்திருந்தனர். கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்தும் தற்போது மேலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும், அவர்களின் தொடர்புகள் மற்றும் தாக்குதல் திட்டம் முழுமையாக வெளிச்சமிடப்படும் எனவும் காவல் துறை தெரிவித்துள்ளது.