“இளம்பெண்கள் வருகையை எதிர்த்ததால் கைது”: சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரு பரபரப்பு குற்றச்சாட்டு!
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு இளம்பெண்கள் வருவதை தான் கடுமையாக எதிர்த்த காரணத்தினாலேயே, பழிவாங்கும் நோக்கில் கேரள அரசு தன்னை கைது செய்ததாக மூத்த தந்திரி கண்டரரு ராஜீவரு பரபரப்புக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். சபரிமலை கோயில் தங்கம் திருட்டு வழக்கில் கடந்த மாதம் கைது செய்யப்பட்ட இவர், தற்போது ஜாமீனில் விடுதலையாகியுள்ள நிலையில், நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனுவில் இந்தத் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
முன்னதாக, தங்கம் திருட்டு வழக்கில் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்குப் போதிய ஆதாரங்களைத் தாக்கல் செய்யவில்லை எனக்கூறி கொல்லம் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. இந்நிலையில், தனது ஜாமீன் மனுவில், சபரிமலை ஆசார முறைகளைக் காக்க தான் எடுத்த நிலைப்பாட்டிற்காகவே அரசு தன் மீது இத்தகைய நடவடிக்கைகளை எடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரம் தற்போது கேரள அரசியல் மற்றும் ஆன்மீக வட்டாரத்தில் மீண்டும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.