பருப்பு வகைகளுக்கு வரிச்சலுகை இல்லை… இந்தியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தில் அமைதியான திருத்தம்
இந்தியா–அமெரிக்கா இடையிலான முக்கிய வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான அறிவிப்பில் வெள்ளை மாளிகை அமைதியாக சில மாற்றங்கள் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆரம்ப அறிக்கை வெளியான அதே நாளில் இந்த திருத்தங்கள் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
முதலில் வெளியிடப்பட்ட அறிக்கையில், அமெரிக்காவின் எரிசக்தி மற்றும் தொழில்நுட்பப் பொருட்களை 500 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் இந்தியா “உறுதியளித்து” (Committed) வாங்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் பின்னர் வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட பதிப்பில், இந்தியா “வாங்கத் திட்டமிட்டுள்ளது” (Intends) என்ற மென்மையான சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், இது கட்டாய கொள்முதல் அல்ல என்பது வெளிப்படையாகியுள்ளது. மேலும், இறக்குமதி பட்டியலில் இடம்பெற்றிருந்த “விவசாயம்” (Agricultural) என்ற குறிப்பும் நீக்கப்பட்டுள்ளது.
வரி குறைப்பைச் சார்ந்த பகுதியிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முந்தைய அறிக்கையில், அமெரிக்க தொழில்துறை பொருட்கள், தானியங்கள், சிவப்பு சோளம், மரக் கொட்டைகள், புதிய மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள், சில பருப்பு வகைகள், சோயாபீன் எண்ணெய், ஒயின் மற்றும் மதுபானங்கள் உள்ளிட்ட பல பொருட்களுக்கு இந்தியா வரியை குறைக்கும் அல்லது நீக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் திருத்தப்பட்ட அறிக்கையில் “சில பருப்பு வகைகள்” என்ற பகுதி மட்டும் நீக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தியா தனது டிஜிட்டல் சேவை வரிகளை நீக்கும் என்று முன்பு கூறப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த வரி தொடர்பான வாசகம் நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக டிஜிட்டல் வர்த்தக விதிகள் குறித்து இரு நாடுகளும் தொடர்ந்து ஆலோசனை நடத்தும் என மாற்றப்பட்டுள்ளது.
இத்தகைய மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தாலும், இந்தியாவுக்கு விதிக்கப்பட்ட 18 சதவீத வரிச்சலுகை தொடர்பான நடவடிக்கை தொடர்கிறது. ரஷ்ய எண்ணெய் இறக்குமதி விவகாரத்தில் விதிக்கப்பட்ட 25 சதவீத வரியை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஏற்கனவே நீக்கிய நிலையில், இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் அடுத்த மாதம் அதிகாரப்பூர்வமாக கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.