பலுசிஸ்தானில் 12 பகுதிகளில் ஒரே நேர தாக்குதல் – பலோச் ஆயுத அமைப்பின் ரத்த வெள்ளம்!
பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில், பிரிவினை கோரிக்கையுடன் செயல்படும் பலோச் விடுதலைப் படை (BLA) இன்று அதிகாலை தொடங்கி 12-க்கும் மேற்பட்ட இடங்களில் ஒருங்கிணைந்த தாக்குதல்களை நடத்தி பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தாக்குதல்களை, “ஆபரேஷன் ஹெரோஃப்” என பெயரிட்டு, இரண்டாம் கட்ட ஆயுத நடவடிக்கையாக தொடங்கியுள்ளதாக அந்த அமைப்பு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. தானியங்கி துப்பாக்கிச் சூடு, தற்கொலைத் தாக்குதல் உள்ளிட்ட வன்முறை முறைகள் மூலம் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
குவெட்டா, பஸ்னி, மஸ்துங், நுஷ்கி, குவாடர் உள்ளிட்ட 12 முக்கிய மாவட்டங்களில், ராணுவ முகாம்கள், காவல் நிலையங்கள், அரசு நிர்வாக அலுவலகங்கள் ஆகியவை நேரடியாக இலக்காக்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவங்களில், 10 பாதுகாப்புப் படையினர் உயிரிழந்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதற்கெதிரான ராணுவ நடவடிக்கைகளில் 58 கிளர்ச்சியாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் மொத்த உயிரிழப்பு 68-ஆக உயர்ந்துள்ளது.
மாகாணத் தலைநகரான குவெட்டா நகரில் மட்டும் 4 போலீஸ் அதிகாரிகள் பலியாகியுள்ளனர். அங்குள்ள ரயில் நிலையம் மற்றும் உயர் பாதுகாப்பு வளையப் பகுதிகளில் தொடர் குண்டுவெடிப்பு சத்தங்கள் கேட்டதாக பொதுமக்கள் பீதியுடன் தெரிவித்துள்ளனர்.
பாதுகாப்பு காரணங்களால் பலுசிஸ்தான் முழுவதும் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், மொபைல் தொடர்பு மற்றும் இணைய சேவைகள் முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளன.
மேலும், நுஷ்கி மாவட்டத்தின் துணை ஆணையர் ஆயுத குழுவினரால் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
இந்த தாக்குதல்களை கடுமையாக கண்டித்துள்ள பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், “பயங்கரவாதத்தை முற்றிலும் ஒழிக்கும் வரை பாதுகாப்புப் படைகளின் நடவடிக்கைகள் தொடரும்” என உறுதியளித்துள்ளார். இதனிடையே, ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் வான்வழி கண்காணிப்பும் தாக்குதல்களும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
பலுசிஸ்தான் முழுவதும் உயர் எச்சரிக்கை நிலை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தானின் உள்நாட்டு பாதுகாப்பு மீண்டும் கேள்விக்குறியாகியுள்ளது.