மோடியின் ராஜதந்திர அதிரடி – உலக அரங்கில் அமெரிக்கா தனிமைப்படும் நிலை!

Date:

மோடியின் ராஜதந்திர அதிரடி – உலக அரங்கில் அமெரிக்கா தனிமைப்படும் நிலை!

வரிவிதிப்பை மிரட்டல் ஆயுதமாக மாற்றி உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ட்ரம்புக்கு, இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்து ஐரோப்பிய யூனியன் நேரடி பதிலடி கொடுத்துள்ளது. ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்காவை நம்புவது ஆபத்தானது என்ற உணர்வு அதிகரித்துள்ள நிலையில், கனடாவும் இந்தியாவுடன் நெருங்கிய வர்த்தக உறவுக்கு முன்வந்துள்ளது.

கிரீன்லாந்தை கைப்பற்றும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த பிரிட்டன் உள்ளிட்ட 7 ஐரோப்பிய நாடுகள் மீது கூடுதல் வரி விதித்து ட்ரம்ப் தனது அதிகார மனப்பான்மையை வெளிப்படுத்தினார். இதுவே, 18 ஆண்டுகளுக்கும் மேலாக இழுபறியில் இருந்த இந்தியா – ஐரோப்பிய யூனியன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் சூழலை உருவாக்கியுள்ளது.

உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25 சதவீதத்தையும், சர்வதேச வர்த்தகத்தில் மூன்றில் ஒரு பங்கையும் கொண்ட இந்த ஒப்பந்தம், உலகின் மிகப் பெரிய வர்த்தக உடன்படிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

இந்த ஒப்பந்தத்தின் படி, 27 உறுப்புநாடுகளை கொண்ட ஐரோப்பிய யூனியனில் இருந்து வரும் 96.6 சதவீத பொருட்களுக்கான சுங்க வரிகளை இந்தியா நீக்கியுள்ளது. குறிப்பாக, ட்ரம்பின் 50 சதவீத வரி தாக்குதலால் பாதிக்கப்பட்ட ஜவுளி, ரத்தினம், ஆபரணம், காலணி போன்ற துறைகளில் இந்தியா ஐரோப்பாவுக்கான முக்கிய ஏற்றுமதி மையமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, ஏற்கனவே இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொண்டுள்ள பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மர், 2018க்குப் பிறகு முதல்முறையாக சீனாவுக்குச் சென்று புதிய வர்த்தக உடன்படிக்கையை ஏற்படுத்தியுள்ளார். இதனால் அமெரிக்காவுடனான பிரிட்டனின் வர்த்தக உறவு பின்னடைவு காணும் என கணிக்கப்படுகிறது.

அதேபோல், சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு சீனாவுக்குச் சென்ற கனடா பிரதமர் மார்க் கார்னி, சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து முக்கிய வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். இதற்கு கடும் எதிர்வினை தெரிவித்த ட்ரம்ப், கனடா மீது 100 சதவீத வரி விதிக்கப் போவதாக மிரட்டியுள்ளார்.

மேலும், கனடா விமானங்களுக்கு அமெரிக்காவில் 50 சதவீத வரி விதிப்பதோடு, பாம்பார்டியர் நிறுவனத்தின் விமான சான்றிதழ்களையும் ரத்து செய்வதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்த பிரதமர் கார்னி, எதேச்சதிகார அழுத்தங்களுக்கு உலகம் ஒருபோதும் அடிபணிய தேவையில்லை என கனடா நிரூபிக்கும் என்று உறுதியாக தெரிவித்தார். டாவோஸ் உலக பொருளாதார மன்றத்திலும், உலக ஒழுங்கு சீர்குலைவுக்கு ட்ரம்ப் காரணம் என அவர் வெளிப்படையாக குற்றம்சாட்டினார்.

முன்னதாக கனடாவை அமெரிக்காவின் 51வது மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற ட்ரம்பின் பேச்சும், கனடாவின் கார் மற்றும் எண்ணெய் தேவையில்லை என்ற கருத்துகளும் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தின.

இந்தச் சூழலில், இந்தியாவுக்கு மலிவு விலையில் கச்சா எண்ணெய், திரவ இயற்கை எரிவாயு மற்றும் LPG வழங்க கனடா தயாராகியுள்ளது. அதே நேரத்தில், இந்தியாவிலிருந்து அதிக அளவில் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்களை கனடா வாங்க முடிவு செய்துள்ளது.

இந்த முடிவு, மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மற்றும் கனடா எரிசக்தித் துறை அமைச்சர் டிம் ஹாட்ஜ்சன் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்டது.

அடுத்த வாரம் பிரதமர் மார்க் கார்னி இந்தியா வரவுள்ள நிலையில், யுரேனியம், அணுசக்தி, எரிசக்தி மற்றும் முக்கிய கனிமங்கள் தொடர்பான பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, நியூசிலாந்து, ஓமன் ஆகிய நாடுகள் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தங்களை ஏற்கனவே செய்துள்ள நிலையில், அடுத்த மாதம் பிரேசில் அதிபர் லூலா டா சில்வாவும் இந்தியா வந்து புதிய உடன்படிக்கைகளில் கையெழுத்திட உள்ளார்.

இவ்வாறு, ட்ரம்பின் கணிக்க முடியாத செயல்பாடுகளை புறக்கணித்து, உலகின் முக்கிய நாடுகள் இந்தியாவை மையமாகக் கொண்டு தங்களின் வர்த்தக பாதையை மாற்றத் தொடங்கியுள்ளன என்பதே தற்போதைய அரசியல் – பொருளாதார உண்மை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

கணைய புற்றுநோயை முற்றிலும் அழிக்கக் கூடிய புதிய சிகிச்சை முறை – ஆராய்ச்சியில் முன்னேற்றம்

கணைய புற்றுநோயை முற்றிலும் அழிக்கக் கூடிய புதிய சிகிச்சை முறை –...

திடீரென செயலிழந்த விராட் கோலியின் இன்ஸ்டாகிராம் கணக்கு – ரசிகர்கள் அதிர்ச்சி

திடீரென செயலிழந்த விராட் கோலியின் இன்ஸ்டாகிராம் கணக்கு – ரசிகர்கள் அதிர்ச்சி இந்திய...

போலீஸ் அத்துமீறல் குற்றச்சாட்டு – சென்னையில் இளம்பெண் தற்கொலை முயற்சி

போலீஸ் அத்துமீறல் குற்றச்சாட்டு – சென்னையில் இளம்பெண் தற்கொலை முயற்சி சென்னை பட்டினப்பாக்கம்...

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் ஆலயத்தில் தை தேரோட்டத் திருவிழா – பக்தர்களால் நிறைந்த கோலாகலம்

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் ஆலயத்தில் தை தேரோட்டத் திருவிழா – பக்தர்களால் நிறைந்த...