ஆப்கானிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கை இப்போது இல்லை – பாகிஸ்தான் ராணுவ அமைச்சர்
ஆப்கானிஸ்தானில் ஆட்சி செய்து வரும் தலிபான் அரசுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க பாகிஸ்தான் தற்போது அவசரப்படவில்லை என பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார். அதற்கான உகந்த நேரம் வரும் வரை காத்திருக்க வேண்டிய நிலை இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) என்ற தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புக்கு ஆப்கானிஸ்தான் தொடர்ந்து ஆதரவு வழங்கி வருவதாக பாகிஸ்தான் நீண்ட காலமாக குற்றம் சாட்டி வருகிறது. இதன் விளைவாக, சமீப மாதங்களில் பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளில் தாக்குதல்கள் மற்றும் குண்டுவெடிப்பு சம்பவங்கள் அதிகரித்து, இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
இந்த சூழலில் ஊடகமொன்றுக்கு பேட்டியளித்த கவாஜா ஆசிப், தலிபான் அரசுக்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கும் என்பது உறுதியான விஷயம் தான் என்றாலும், அதற்கான சரியான தருணம் இன்னும் வரவில்லை என்று தெரிவித்தார்.
அண்டை நாடுகளில் அரசியல் குழப்பம், உள்நாட்டு கலவரம் மற்றும் போர் சூழல் நிலவி வருவதால், தற்போதைய நிலையில் ஆப்கானிஸ்தானை தாக்குவது சரியான முடிவாக இருக்காது என்றும் அவர் கூறினார். ஆனால், பாகிஸ்தானின் பாதுகாப்பு நலன்களை கருத்தில் கொண்டு, எதிர்காலத்தில் தலிபான்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த நடவடிக்கை கட்டாயமாக ராணுவ தாக்குதலாக மட்டும் இருக்க வேண்டியதில்லை என்றும், தூதரக உறவுகளை துண்டிப்பது போன்ற அரசியல் அல்லது ராஜதந்திர நடவடிக்கைகளாகவும் அமையலாம் என்றும் கவாஜா ஆசிப் விளக்கம் அளித்துள்ளார்.