பாகிஸ்தான் சிறையில் இம்ரான் கானின் உடல்நிலை கவலைக்கிடம்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தற்போது சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், தேவையான மருத்துவ பராமரிப்பு கிடைக்காததால் அவரது உடல்நிலை மோசமடைந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக அவரது கண் பார்வை வேகமாக குறைந்து வருவதாகவும், இது திட்டமிட்ட அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை எனவும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. சிறையில் நிலவும் சூழல் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவராக விளங்கிய இம்ரான் கான், 2018 முதல் 2022 வரை நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றிருந்தார். சவூதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான் வழங்கியதாக கூறப்படும் 8 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கைக்கடிகாரத்தை அரசு கருவூலத்தில் ஒப்படைக்காமல் விற்பனை செய்ய முயன்றதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில், ஊழல் வழக்கில் அவருக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 2023ம் ஆண்டு முதல் சிறைவாசம் அனுபவித்து வரும் அவர், தற்போது ராவல்பிண்டியில் அமைந்துள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரது உடல்நலம் தொடர்பான தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், இம்ரான் கான் கடுமையான கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், உரிய சிகிச்சை வழங்கப்படாவிட்டால் நிரந்தர பார்வை இழப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் எச்சரித்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து இம்ரான் கான் தனது குடும்பத்தினருடனோ அல்லது சட்ட ஆலோசகர்களுடனோ எந்தவித தொடர்பையும் மேற்கொள்ளவில்லை. சிறையில் அடிப்படை சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தாலும், கண் தொடர்பான முழுமையான மருத்துவ பரிசோதனை நடத்த தேவையான வசதிகள் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜனவரி 31ஆம் தேதி அவருக்கான விரிவான மருத்துவ பரிசோதனை திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதில் தாமதம் ஏற்பட்டால் அவரது கண்பார்வை நீண்ட காலத்திற்கு பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ‘தி இன்டிபென்டன்ட்’ செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, இம்ரான் கான் தனது சட்ட குழுவை நேரில் சந்திக்காமல் 100 நாட்களுக்கும் மேலாகியுள்ளதாகவும், பல நீதிமன்றங்களில் 100க்கும் அதிகமான வழக்குகளை எதிர்கொண்டு வரும் நிலையிலும் இவ்வாறு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இம்ரான் கானுக்கு எதிராக அரசு தரப்பில் வழக்குகள் தொடரப்பட்டு வரும் அதே நேரத்தில், அவரது வழக்கறிஞர்கள் அவரை சந்திக்க அனுமதி மறுக்கப்படுவது நியாயமற்றது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. மேலும், கண் சம்பந்தமான பிரச்னைகள் இருப்பின், சிறைத்துறை நிர்வாகம் உடனடியாக தகவல் அளித்து, சிகிச்சை ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என அவரது சகோதரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
கடந்த 2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தான், இம்ரான் கானுக்கு தனது தனிப்பட்ட மருத்துவரை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டதாகவும், அதன்பிறகு இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் தெளிவான உத்தரவு பிறப்பித்திருந்தும், மீண்டும் அந்த அனுமதி மறுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு கைதியின் உயிருக்கும் உடல்நலத்திற்கும் ஆபத்தை ஏற்படுத்தும் அரசியல் நோக்கமுள்ள செயல் என தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது.
இந்த விவகாரத்தில் நீதித்துறை உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இது அரசியல் விவாதம் அல்ல; மனித ஆரோக்கியம் தொடர்பான விஷயம் என்றும், எந்தவித அலட்சியத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அந்த கட்சி வலியுறுத்தியுள்ளது.