விமான விபத்தில் அஜித் பவார் உயிரிழப்பு : பனிமூட்டமா? இயந்திரக் கோளாறா? – விசாரணை தீவிரம்
மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அஜித் பவார் பயணம் செய்த தனியார் விமானம் விபத்துக்குள்ளாகி அவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு செய்யப்பட்டது. இந்த கோர விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து தற்போது பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.
மகாராஷ்டிராவில் விரைவில் நடைபெற உள்ள மாவட்ட ஊராட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தல்களை முன்னிட்டு, பல்வேறு தேர்தல் பிரச்சார கூட்டங்களில் கலந்துகொள்ள அஜித் பவார் திட்டமிட்டிருந்தார். அதன்படி, தனது சொந்த தொகுதியான பாராமதியில் நடைபெறவிருந்த நான்கு பொதுக்கூட்டங்களில் பங்கேற்க, மும்பையிலிருந்து தனியார் விமானத்தில் அவர் பயணம் மேற்கொண்டார்.
பாராமதி விமான நிலையத்தில் தரையிறங்கும் போது, விமானம் ஓடுபாதையில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. காலை 8.48 மணியளவில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில் விமானம் தீப்பிடித்து எரிந்ததாகவும், அஜித் பவார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் சிவில் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை அமைப்பு உறுதி செய்துள்ளது.
இந்த விபத்தில், அஜித் பவார் மட்டுமின்றி, அவருடன் பயணித்த தனிப்பட்ட உதவியாளர், பாதுகாப்பு அதிகாரி, முதன்மை விமானி மற்றும் துணை விமானி என மொத்தம் ஐந்து பேரும் உயிரிழந்துள்ளனர்.
விபத்துக்குள்ளான விமானம் கனடாவில் தயாரிக்கப்பட்ட பம்பார்டியர் லியர்ஜெட்–45 வகையைச் சேர்ந்தது. 2010ஆம் ஆண்டிலிருந்து சேவையில் உள்ள இந்த விமானம், VT-SSK என்ற பதிவு எண்ணுடன் வி.எஸ்.ஆர் வென்ச்சர்ஸ் நிறுவனத்தால் இயக்கப்பட்டு வந்தது. அந்த நிறுவனம் மொத்தம் 17 லியர்ஜெட்–45 விமானங்களை இயக்கி வருவதாக கூறப்படுகிறது.
டெல்லியை தலைமையிடமாகக் கொண்ட வி.எஸ்.ஆர் வென்ச்சர்ஸ் நிறுவனம், 2011ஆம் ஆண்டு விஜய் குமார் சிங் மற்றும் ரோஹித் சிங் ஆகியோரால் தொடங்கப்பட்டது. வணிகப் பயணங்கள் மற்றும் மருத்துவ அவசர சேவைகளுக்கான சார்ட்டர் விமானப் போக்குவரத்தையே இந்த நிறுவனம் முக்கியமாக வழங்கி வருகிறது. டெல்லி, மும்பை, ஹைதராபாத் மற்றும் போபால் நகரங்களில் இருந்து 24 மணி நேர சேவையையும் வழங்குவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
லியர்ஜெட்–45 என்பது நடுத்தர ரக வணிக ஜெட் விமானமாகும். இரண்டு ஹனிவெல் டர்போஃபேன் இயந்திரங்களால் இயக்கப்படும் இந்த விமானம், ஒரே நேரத்தில் சுமார் 8 பயணிகளை ஏற்றிச் செல்லக் கூடியது. அதிகபட்சமாக 3,000 கிலோமீட்டர் தூரம் வரை வேகமாகப் பறக்கும் திறன் கொண்டதாக இது அறியப்படுகிறது. பெரும்பாலும் கார்ப்பரேட் நிர்வாகிகள் மற்றும் விஐபிகளின் தனிப்பட்ட பயணங்களுக்கு இந்த விமானம் பயன்படுத்தப்படுகிறது.
விபத்திற்கான காரணங்களை கண்டறிவதற்காக, விமானத்தின் கருப்புப் பெட்டி, அதாவது விமானத் தரவு பதிவுக் கருவி மற்றும் காக்பிட் குரல் பதிவுக் கருவி மீட்கப்பட்டுள்ளன. விமானிகள் மேற்கொண்ட தகவல் தொடர்பு, விமானத்தின் தொழில்நுட்ப அமைப்புகள், தரையிறங்கிய நேரத்தில் நிலவிய வானிலை நிலவரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
இதற்கு முன்பும், 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், இதே நிறுவனத்திற்குச் சொந்தமான VT-DBL எனப் பதிவு செய்யப்பட்ட லியர்ஜெட்–45XR விமானம், விசாகப்பட்டினத்திலிருந்து மும்பை வந்தபோது தரையிறங்கும் நிலையில் விபத்தில் சிக்கியது. அப்போது தீ விரைவாக அணைக்கப்பட்டதால், விமானத்தில் பயணித்த 8 பேரும் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர்.
தற்போதைய விபத்து தொடர்பான ஆரம்பகட்ட விசாரணையில், விபத்து நேரத்தில் புனே – பாராமதி பகுதிகளில் பார்வைத் தெளிவு மிகவும் குறைவாக இருந்ததாக தெரியவந்துள்ளது. மேலும், பாராமதி விமான நிலையத்தில் இன்ஸ்ட்ரூமென்ட் லேண்டிங் சிஸ்டம் (ILS) வசதி இல்லாததும், விமானம் பாதுகாப்பாக தரையிறங்குவதில் சிக்கலை ஏற்படுத்தியிருக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
ILS வசதி இல்லாத விமான நிலையங்களில், விமானிகள் கண்ணோட்டம் மற்றும் கைமுறை கட்டுப்பாடுகளை மட்டுமே நம்பி விமானத்தை தரையிறக்க வேண்டிய சூழல் உருவாகும். முதல் முறையாக தரையிறங்க முயன்றபோது ஓடுபாதையை சரியாக அணுக முடியாமல் விமானம் வளைவு எடுத்ததாகவும், அந்த முயற்சி தோல்வியடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து, இரண்டாவது முறையாக தரையிறங்க முயன்றபோது விமானி ‘மேடே’ என்ற அவசர அழைப்பை விடுத்ததாக கூறப்படுகிறது. அதன் பின்னர் சுமார் 100 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானம் திடீரென சமநிலையை இழந்து, ஓடுபாதைக்கு முன்பாக தரையில் மோதி வெடித்ததாகவும், தொடர்ந்து தீப்பற்றியதாகவும் கூறப்படுகிறது.
விபத்து ஏற்பட்ட உடனேயே ஏற்பட்ட கடும் தீ மற்றும் வெடிப்புகளால், மீட்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிவில் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையத்தின் முதற்கட்ட தொழில்நுட்ப ஆய்வு முடிவடைந்ததும், இந்த விபத்து தொடர்பான விரிவான ஆரம்ப அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.