உலகளாவிய பொருளாதார மந்தத்திலும் இந்திய பொருளாதாரம் உறுதியுடன் உள்ளது – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
உலக நாடுகள் பல பொருளாதார சரிவை எதிர்கொண்டு வரும் சூழலிலும், இந்தியாவின் பொருளாதாரம் வலுவாக நிலைத்திருக்கிறது என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் கூட்டு அமர்வில் உரையாற்றிய அவர், சமூகத்தில் பின்தங்கிய மற்றும் ஏழை மக்களின் முன்னேற்றத்திற்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக கூறினார்.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு அவர்களது வசிப்பிடங்களுக்கு அருகிலேயே சுகாதார சேவைகள் கிடைக்கச் செய்யப்பட்டுள்ளதாகவும், கடந்த ஆண்டு 350 மில்லியன் டன் அளவிற்கு உணவுப் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த பத்து ஆண்டுகளில் குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்காக 4 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளதாகவும், உஜ்வாலா திட்டத்தின் கீழ் 2 கோடி குடும்பங்களுக்கு இலவச எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
நெல் உற்பத்தியில் உலக அளவில் இந்தியா முதலிடம் பெற்றுள்ளதாகவும், மின்சார வாகன உற்பத்தியில் நாடு குறிப்பிடத்தக்க சாதனைகளை நிகழ்த்தியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
உலகளாவிய பொருளாதார மந்தநிலை இருந்தாலும், இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சிப் பாதையில் பயணித்து வருவதாக அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
கிராமப்புற பகுதிகள் நெடுஞ்சாலைகளால் இணைக்கப்பட்டுள்ளன என்றும், தமிழகத்தில் புதிய பாம்பன் பாலம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும், கைப்பேசி உற்பத்தியில் உலகில் இரண்டாவது இடத்தில் இந்தியா இருப்பதாகவும் தெரிவித்தார்.
100-க்கும் அதிகமான மாவட்டங்களில் நக்சலிசம் முழுமையாக ஒழிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் அந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்புடனும் அமைதியுடனும் வாழ்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். விரைவில் நக்சல் தீவிரவாதம் முற்றிலும் அழிக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.
ஜிஎஸ்டி வரி முறையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தவை என்றும், அந்த சீர்திருத்தங்களால் நடுத்தர வர்க்கக் குடும்பங்களின் சேமிப்பு அதிகரித்துள்ளதாகவும் குடியரசுத் தலைவர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு 50 ஆயிரமாக இருந்த ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் எண்ணிக்கை தற்போது 2 லட்சமாக உயர்ந்துள்ளதாகவும், அவை மூலம் சுமார் 20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இறுதியாக, உலகக் கோப்பையை கைப்பற்றிய இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கும், மகளிர் பார்வையற்றோர் கிரிக்கெட் அணிக்கும் குடியரசுத் தலைவர் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.