கடலின் நடுப்பகுதியில் புதைந்திருக்கும் புதிர் பள்ளங்கள் : டிராகன் ஹோலில் நடந்த ஆய்வு என்ன சொல்கிறது?
தென்சீனக் கடற்பகுதியில் அமைந்துள்ள ‘ப்ளூ ஹோல்’ எனப்படும் ஆழமான கடற்பள்ளத்தில் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய ஆய்வின் மூலம், இதுவரை உலகிற்கு தெரியாத சுமார் 1,700 வகையான புதிய வைரஸ்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த ஆய்வு தொடர்பான தகவல்கள் அறிவியல் உலகில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன.
உலகம் முழுவதும் வியப்பையும், மர்மத்தையும் ஒருசேர தாங்கிய பல இடங்கள் உள்ளன. பசிபிக் பெருங்கடலில் உள்ள பெர்முடா முக்கோணம், பெரு நாட்டின் நஸ்கா கோடுகள், ஜப்பானில் காணப்படும் யோனகுனி நினைவுச்சின்னம், சிலியின் ஈஸ்டர் தீவு, இங்கிலாந்தின் ஸ்டோன் ஹெஞ்ச் போன்றவை அவற்றில் குறிப்பிடத்தக்கவை.
அதேபோல், கடலின் அடிப்பகுதியில் காணப்படும் ப்ளூ ஹோல்கள் என்பவையும் மர்மம் நிறைந்த இடங்களாக கருதப்படுகின்றன. நிலப்பரப்பில் உருவாகும் பெரிய பள்ளங்களை ‘சிங்க் ஹோல்கள்’ என்று அழைப்பதுபோல், அவை கடலுக்குள் அமைந்திருந்தால் ‘ப்ளூ ஹோல்கள்’ என பெயரிடப்படுகின்றன.
பல மீட்டர் ஆழமும், அகலமும் கொண்ட இந்த கடற்பள்ளங்களின் வெளிப்புறத்தில் பெரும்பாலும் பவளப் பாறைகள் காணப்படுகின்றன. உள்ளே சுண்ணாம்பு பாறைகளே அதிகமாக இருக்கும். ஆக்சிஜன் இல்லாத சூழல் நிலவுவதால், இந்த ப்ளூ ஹோல்களின் உள்ளே உயிரினங்கள் வாழ முடியாது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இதுவரை உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான ப்ளூ ஹோல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பஹாமாஸ், எகிப்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் கடற்பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் இத்தகைய பள்ளங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
20-ஆம் நூற்றாண்டு வரை, இந்த கடற்பள்ளங்கள் குறித்து பல்வேறு நம்பிக்கைகளும், கற்பனைகளும் நிலவி வந்தன. மாயன் நாகரிகத்தினர் இவை பாதாள உலகத்திற்குச் செல்லும் வழிகள் என நம்பினர். சீனர்களோ, இவை ட்ராகன்கள் வசிக்கும் இடங்கள் என கருதி வந்தனர்.
இந்த நம்பிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது 1971-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆய்வு. அமெரிக்காவின் பெலீஸ் கடற்பகுதியில் உள்ள ஒரு ப்ளூ ஹோலில், பிரபல கடல் ஆராய்ச்சியாளர் ஜாக் குஸ்டோ ஆய்வு மேற்கொண்டார். அந்த ஆய்வின் மூலமாகவே ப்ளூ ஹோல்கள் குறித்து உலகம் முழுவதும் அறிவியல் ரீதியான புரிதல் ஏற்பட்டது. அவர் ஆய்வு செய்த அந்த பள்ளம் ‘கிரேட் ப்ளூ ஹோல்’ என அழைக்கப்படுகிறது. இது உலகின் மிகப்பெரிய ப்ளூ ஹோல்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
ஆய்வாளர்களின் கணிப்பின்படி, இன்றைக்கு காணப்படும் ப்ளூ ஹோல்கள் சுமார் 11,500 ஆண்டுகளுக்கு முன், பனிக்காலத்தில் உருவானவை. அக்காலத்தில் தரைப்பகுதியில் இருந்த சிங்க் ஹோல்கள், கடல் நீரால் சூழப்பட்டு, பின்னர் ப்ளூ ஹோல்களாக மாறியிருக்கலாம் என அவர்கள் கூறுகின்றனர்.
இந்த பின்னணியில், தென்சீனக் கடலில் உள்ள ‘ட்ராகன் ஹோல்’ எனப்படும் ப்ளூ ஹோலில் சமீப காலமாக ஆய்வாளர்கள் விரிவான ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். சுமார் ஆயிரம் அடி ஆழம் கொண்ட இந்த கடற்பள்ளத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது, இதுவரை அறியப்படாத 1,700 வகையான வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் முன்பு எந்த அறிவியல் பட்டியலிலும் இடம்பெறாதவை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டது, மருத்துவம் மற்றும் உயிரியல் ஆராய்ச்சி துறைகளில் புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இவை மனிதர்களுக்கு நேரடியாக தீங்கு விளைவிக்காது என்றும், பெரும்பாலும் பாக்டீரியா போன்ற நுண்ணுயிர்களை மட்டுமே பாதிக்கும் தன்மை கொண்டவை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
வைரஸ்களுடன் சேர்த்து, ட்ராகன் ஹோலில் 294 வகையான நுண்ணுயிர்களும் கண்டறியப்பட்டுள்ளன. இதில் 22 சதவீதத்திற்கும் அதிகமானவை, இதுவரை மருத்துவ அறிவியலுக்கு புதிதானவை என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
சூரிய ஒளியும், ஆக்சிஜனும் எட்டாத சூழலில், இத்தனை விதமான வைரஸ்களும், நுண்ணுயிர்களும் வாழ்ந்து வருவது விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, உலகின் பிற ப்ளூ ஹோல்களிலும் இதுபோன்ற ஆய்வுகளை மேற்கொள்ளும் பணிகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.