நாணயம் சுண்டி இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி : குடியரசுத் தலைவர் பயணித்த சாரட் வண்டியின் சுவாரஸ்யப் பின்னணி
டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பாரம்பரியமான சாரட் வண்டியில் பயணித்து விழாவில் கலந்து கொண்டார். ஏன் சாரட் வண்டியே தேர்வு செய்யப்பட்டது? அந்த வண்டிக்குப் பின்னால் இருக்கும் வரலாறு என்ன? அது எப்படி இந்தியாவின் உரிமைக்கு வந்தது? என்பதற்கான பதில்கள் பலரின் கவனத்தை ஈர்த்தன.
நாட்டின் 77-வது குடியரசு தினம் நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. டெல்லி கடமைப் பாதையில் வழக்கம்போல மிகப் பெரிய அளவில் விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து திரௌபதி முர்மு, குதிரைகள் இழுக்கும் பாரம்பரிய சாரட் வண்டியில் பயணித்தார். வண்டியின் முன்பும் பின்னும் குதிரை படை வீரர்கள் அணிவகுத்துச் சென்றனர்.
குடியரசுத் தலைவர் பயன்படுத்திய இந்த சாரட் வண்டிக்கு தனித்துவமான வரலாறு உண்டு. கருப்பு நிறத்தில், தங்க அலங்கார விளிம்புகளுடன் வடிவமைக்கப்பட்ட இந்த வண்டி, ஆறு குதிரைகளை பூட்டும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. வண்டியின் உள்ள்புறம் சிவப்பு நிற வெல்வெட் துணியால் அலங்கரிக்கப்பட்டு, இந்தியாவின் தேசிய சின்னமான அசோகச் சக்கரம் பதிக்கப்பட்டுள்ளது.
இந்த சாரட் வண்டி 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் அல்லது 20-ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. கொல்கத்தாவை மையமாகக் கொண்ட Stuart & Co என்ற நிறுவனம் இதனை உருவாக்கியது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இந்தியாவின் வைசிராய்கள் இதை பயன்படுத்தி வந்தனர். குறிப்பாக, இர்வின், லின்லித்கோ, வேவல் போன்ற ஆளுநர்கள் இந்த சாரட் வண்டியில் பயணம் செய்துள்ளனர்.
பிரிட்டிஷ் இளவரசர்கள் மற்றும் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இந்தியாவிற்கு வருகை தந்தபோதும், அவர்களின் பயணத்திற்காக இதே வண்டி பயன்படுத்தப்பட்டது. மவுண்ட்பேட்டன் இந்த சாரட் வண்டியை பயன்படுத்திய கடைசி வைசிராய் ஆவார்.
1947-ஆம் ஆண்டு இந்தியாவும் பாகிஸ்தானும் சுதந்திரம் பெற்ற பிறகு, இரு நாடுகளும் நிலப்பகுதி, ராணுவ உபகரணங்கள், தொலைத்தொடர்பு வசதிகள், ரயில்வே சொத்துகள், கலைப்பொருட்கள் உள்ளிட்டவற்றை பகிர்ந்து கொண்டன.
அந்தப் பகிர்வின்போது, இந்த தங்க அலங்கார சாரட் வண்டி யாருக்குச் சொந்தம் என்ற கேள்வியில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. இந்தியாவும் பாகிஸ்தானும் இரண்டும் அந்த வண்டிக்கு உரிமை கோரின.
பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகும் எந்த நாட்டும் வண்டியை விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லாததால், ஒரு வித்தியாசமான தீர்மானம் எடுக்கப்பட்டது. அதாவது, நாணயம் சுண்டி எதில் வெற்றி கிடைக்கிறதோ, அந்த நாட்டுக்கே சாரட் வண்டி வழங்கப்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
அந்த நிகழ்வில் இந்தியா சார்பில் லெப்டினன்ட் கர்னல் தாக்கூர் கோவிந்த் சிங் பங்கேற்றார். பாகிஸ்தான் தரப்பில் சஹாப்ஸாதா யாகூப் கான் கலந்து கொண்டார். நாணயம் சுண்டி விடப்பட்டபோது, அதிர்ஷ்டம் இந்தியாவுக்கு சாதகமாக இருந்ததால், சாரட் வண்டி இந்தியாவின் வசம் வந்தது.
1950-ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் குடியரசு தின விழாவில், இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் இந்த சாரட் வண்டியில் பயணித்தார். அதன்பின், குடியரசு தின விழாவில் குடியரசுத் தலைவர்களின் பயணத்திற்காக இந்த வண்டி பயன்படுத்தப்பட்டு வந்தது.
ஆனால், 1984-ஆம் ஆண்டு பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதன் பின்னர், நாட்டின் உயர்பதவி வகிக்கும் தலைவர்களின் பாதுகாப்பு குறித்து கடும் கவலை எழுந்தது. இதன் காரணமாக, திறந்த அமைப்புடைய இந்த சாரட் வண்டியை பயன்படுத்துவதை குடியரசுத் தலைவர்கள் தவிர்த்து, குண்டு துளைக்காத பாதுகாப்பு வாகனங்களில் பயணிக்கத் தொடங்கினர்.
2024-ஆம் ஆண்டு வரலாறு மீண்டும் ஒரு முறை திரும்பியது. அந்த ஆண்டில், திரௌபதி முர்மு மீண்டும் இந்த பாரம்பரிய சாரட் வண்டியில் பயணித்து குடியரசு தின விழாவில் கலந்து கொண்டார். அதன்பின் வந்த ஆண்டுகளிலும் அதே நடைமுறை தொடரப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, இந்த ஆண்டும் தங்க அலங்காரத்துடன், ஆறு குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டி குடியரசு தின விழாவில் பயன்படுத்தப்பட்டது