சீன அணு ஆயுத ரகசியங்கள் CIA-க்கு கசிந்ததா? – ஜி ஜின்பிங்கிற்கு எதிரான சதி பரபரப்பு
சீனாவில் அதிபர் ஜி ஜின்பிங்கின் அதிகாரத்தை அகற்றும் வகையில் உள்நாட்டு சதி நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அந்த சதியின் ஒரு பகுதியாக, சீனாவின் அணு ஆயுதங்கள் தொடர்பான மிக ரகசிய தகவல்கள் அமெரிக்க உளவு அமைப்பான CIA-க்கு வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. சீனாவில் உண்மையில் என்ன நடக்கிறது என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக 2012ஆம் ஆண்டு ஜி ஜின்பிங் பொறுப்பேற்றார். அதனைத் தொடர்ந்து 2013ஆம் ஆண்டு சீன மக்கள் குடியரசின் அதிபராகவும் அவர் பதவி வகிக்கத் தொடங்கினார்.
சீன அரசியலமைப்பின் படி, அதிபர் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும். மேலும் அமெரிக்காவைப் போலவே, ஒரு நபர் அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே அந்தப் பதவியை வகிக்க முடியும் என்ற நடைமுறை இருந்தது. அந்த அடிப்படையில் பார்க்கும்போது, 2013ல் ஆட்சிக்கு வந்த ஜி ஜின்பிங்கின் பதவிக்காலம் 2023ஆம் ஆண்டுடன் முடிவடைந்திருக்க வேண்டும். அதற்குப் பிறகு புதிய அதிபர் பொறுப்பேற்றிருக்க வேண்டிய நிலை இருந்தது.
ஆனால் அந்த நடைமுறை செயல்படுத்தப்படவில்லை. தனது ஆட்சியை பத்து ஆண்டுகளுடன் முடிக்க விரும்பாத ஜி ஜின்பிங், 2018ஆம் ஆண்டு அரசியலமைப்பில் முக்கிய சட்டத் திருத்தத்தை கொண்டு வந்தார். இதன் மூலம், சீனாவில் ஒரே நபர் எத்தனை முறை வேண்டுமானாலும் அதிபராக பதவி வகிக்க முடியும் என்ற விதி அமலுக்கு வந்தது.
எளிய வார்த்தைகளில் சொல்வதானால், ஜி ஜின்பிங் உயிருடன் இருக்கும் வரையில் சீனாவின் உச்ச அதிகாரப் பதவியில் அவரே தொடரும் சூழல் உருவாக்கப்பட்டது.
இந்த காலவரையற்ற ஆட்சி முறை, சீன கம்யூனிஸ்ட் கட்சியிலும், ராணுவத்திலும் உயர்ந்த பதவிகளில் உள்ள பலருக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஏனெனில், இனி அவர்களுக்குத் தலைமைப் பதவியை அடையும் வாய்ப்பே இல்லாமல் போனது.
இதன் விளைவாக, ஜி ஜின்பிங்கிற்கு எதிரான மறைமுக நடவடிக்கைகள் ஆரம்பமானதாக கூறப்படுகிறது. குறிப்பாக 2012 முதல் 2015 வரையிலான காலப்பகுதியில், சோவ் யோங்காங், போ சிலாய், சு சாய்ஹோ மற்றும் லிங் ஜிஹுவா ஆகிய நான்கு முக்கிய தலைவர்கள் அரசுக்கு எதிரான சதியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இவர்கள் ஜி ஜின்பிங்கின் ஆட்சியை குலைக்கவும், அவர் மீண்டும் அதிகாரம் பெறுவதை தடுக்கவும் முயன்றதாக சீன அரசே குற்றம் சுமத்தியது.
2022ஆம் ஆண்டு உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு நாடு திரும்பிய ஜி ஜின்பிங், தொடர்ந்து 10 நாட்கள் பொதுமக்கள் முன்னிலையில் தோன்றவில்லை. இதையடுத்து, ஹூ ஜின்டாவோ, வென் ஜியாபாவோ உள்ளிட்ட மூத்த தலைவர்கள் ஜி ஜின்பிங்கை அதிகாரத்திலிருந்து நீக்கிவிட்டதாக வதந்திகள் பரவின. சீன ராணுவம் அரசைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் பின்னர் அவை அனைத்தும் ஆதாரமற்ற வதந்திகள் என தெரிய வந்தது. இருப்பினும், அந்த செய்திகளை கேட்டு மக்களிடையே ஏற்பட்ட சந்தோஷம், ஜி ஜின்பிங்கின் ஆட்சி மீது பொதுமக்கள் கொண்டிருந்த வெறுப்பை வெளிப்படுத்தியது.
இந்த பின்னணியில்தான், தற்போது மீண்டும் ஜி ஜின்பிங்கிற்கு எதிரான சதி முயற்சி நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜாங் யூக்சியா என்பவர், சீன மத்திய ராணுவ ஆணையத்தின் துணைத் தலைவராக பதவி வகித்து வந்தார். ஜி ஜின்பிங்கின் தந்தைக்கு மிக நெருங்கிய நண்பரான இவர், ஜி ஜின்பிங்கிற்கு குடும்ப உறுப்பினர் போன்ற நம்பிக்கைக்குரியவராக கருதப்பட்டார். அதேபோல், லியு சென்லி என்பவர் சீன மத்திய ராணுவ ஆணையத்தின் தலைமைத் தளபதியாக இருந்தார். இவர்கள் இருவரும் இணைந்து ஜி ஜின்பிங்கின் ஆட்சியை அகற்ற முயன்றதாக கூறப்படுகிறது. மேலும், சீனாவின் அணு ஆயுதங்கள் தொடர்பான மிக ரகசிய தகவல்களை CIA-க்கு வழங்கியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, இருவரும் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அதோடு, மேலும் ஐந்து உயரதிகாரிகள் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் சீன ராணுவத்திலும், கம்யூனிஸ்ட் கட்சியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதே நேரத்தில், ஜி ஜின்பிங்கிற்கு எதிரான ஆட்சி கவிழ்ப்பு சதி குறித்து சீன அரசு இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. கைது செய்யப்பட்ட அதிகாரிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் விதிமீறல்கள் காரணமாக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மட்டுமே சீன அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
சீன அரசே தன் நாட்டில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சி நடந்ததாக வெளிப்படையாக ஒப்புக்கொள்ளும் வாய்ப்பு குறைவு. எனவே, இந்த தகவல்களின் உண்மை தன்மையை உறுதிப்படுத்த இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.