இசையமைப்பாளர் சபேஷ் காலமானார் – திரையுலகினர் இரங்கல்
பிரபல இசையமைப்பாளர் எம்.சி. சபேஷ் உடல் நலக்குறைவால் இன்று மதியம் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 68.
இசையமைப்பாளர் தேவாவின் இளைய சகோதரர் ஆன சபேஷ், தனது இரட்டை சகோதரர் முரளியுடன் இணைந்து “சபேஷ்–முரளி” என்ற பெயரில் பல தமிழ் திரைப்படங்களுக்கு இசையமைத்தார். அவர் திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றினார்.
சபேஷுக்கு கீதா, அர்ச்சனா என்ற இரு மகள்களும், கார்த்திக் என்ற மகனும் உள்ளனர். அவரது மனைவி தாரா சில ஆண்டுகளுக்கு முன்பு காலமானார்.
சபேஷ்–முரளி இணைப்பு சமுத்திரம், தவமாய் தவமிருந்து, இம்சை அரசன் 23-ம் புலிகேசி, இந்திரலோகத்தில் நா.அழகப்பன், மாயாண்டி குடும்பத்தார், கோரிப்பாளையம் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்தது.
அதேபோல், தேவா இசையமைத்த பல கானா பாடல்களையும் சபேஷ் பாடியுள்ளார்.
அதில் ‘கொத்தால்சாவடி லேடி’, ‘உதயம் தியேட்டருல என் இதயத்தை தொலைச்சேன்’, ‘காத்தடிக்குது காத்தடிக்குது’, ‘ஒரே ஒரு ஊருக்குள்ளே’ போன்ற பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றவை.
சபேஷின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
பாடலாசிரியர் வைரமுத்து தனது இரங்கல் பதிவில்,
“இசையே வாழ்வென்று வாழ்ந்த சபேஷ் அமைதியான கலைஞர். தேவா குடும்பத்தார்க்கு மட்டுமல்ல, வாசிக்கப்படும் இசைக்கருவிகளுக்கே இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டமில்லாத கலைஞன் அடங்கிவிட்டான்,”
என்று கூறி இரங்கல் தெரிவித்தார்.