இண்டியா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி – பிரசாந்த் கிஷோர் விமர்சனம்
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, இண்டியா கூட்டணி தனது முதல்வர் வேட்பாளராக ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவை அறிவித்துள்ளது. இத்தீர்மானம் குறித்து ஜன் சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
பாட்னாவில் நடைபெற்ற இண்டியா கூட்டணியின் செய்தியாளர் சந்திப்பில் காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட், “இந்த தேர்தலில் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவை நாங்கள் ஒருமனதாக ஆதரிக்கிறோம். துணை முதல்வர் வேட்பாளராக முகேஷ் சஹானி அறிவிக்கப்படுகிறார்,” என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிரசாந்த் கிஷோர்,
“லாலு பிரசாத் யாதவின் ‘காட்டாட்சி’ மீண்டும் வந்தால், தேஜஸ்வி முதல்வர் முகமாக இருப்பார் என்பது முன்பே தெரிந்ததே. அதில் புதியது ஒன்றும் இல்லை,”
என்று கூறினார்.
பிஹார் மாநிலத்தில் தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியும் (என்டிஏ), மகாகட்பந்தனும் (இண்டியா கூட்டணி) கடுமையான போட்டியில் உள்ளன.
என்டிஏவில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்), இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, மற்றும் ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
மகாகட்பந்தனில் ஆர்ஜேடி, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், மற்றும் விகாஷீல் இன்சான் கட்சி ஆகியவை இணைந்துள்ளன.
பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி பிஹாரின் 243 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. “சுத்தமான அரசியல்” மற்றும் “புதிய மாற்று அரசியல்” என்ற கோஷங்களுடன் அவர் மக்களை சந்தித்து வருகிறார். அவரது பாதயாத்திரைகள் இளைஞர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளன.
இந்நிலையில், முதல் கட்டத் தேர்தலுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்த ஜன் சுராஜ் கட்சியின் மூன்று வேட்பாளர்கள் திடீரென மனுவைத் திரும்பப் பெற்றனர். இதற்குப் பாஜக தான் காரணம் என பிரசாந்த் கிஷோர் குற்றம்சாட்டியுள்ளார்.