77-வது குடியரசு தினவிழா இன்று நாடு முழுவதும் கோலாகலம்
இந்திய திருநாட்டின் 77-வது குடியரசு தினவிழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
இந்திய அரசியலமைப்பு சட்டம் அமலுக்கு வந்த நாளை நினைவு கூறும் வகையில், ஆண்டுதோறும் ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், நாட்டின் 77-வது குடியரசு தின விழா இன்று உற்சாகமாக நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு, டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவுச் சின்னத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர்வளையம் வைத்து வீர மரியாதை செலுத்துகிறார். தொடர்ந்து, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றிவைக்கிறார். அப்போது தேசிய கீதம் இசைக்கப்பட்டு, 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, கடமைப் பாதையில் பிரமாண்டமான ராணுவ அணிவகுப்பு, கலை நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்தி அணிவகுப்புகள் நடைபெற உள்ளன.
இந்த விழாவில் மத்திய அமைச்சர்கள் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர். மேலும், ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா மற்றும் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் ஆன்டோனியோ கோஸ்டா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கிறார்கள்.
குடியரசு தின விழாவில் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளதால், டெல்லி முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அசம்பாவிதங்கள் எதுவும் நிகழாமல் இருக்க போலீசார் மற்றும் பாதுகாப்புப் படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எல்லைப் பகுதிகளில் விடிய விடிய வாகன சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.