இந்திய நாகரிகத்தின் வரலாறு இரு லட்சம் ஆண்டுகள் நீள்கிறது – மோகன் பாகவத் கருத்து
இந்திய நாகரிகம் சுமார் இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்றும், பழங்குடியினர் சமூகமே சனாதன தர்மத்தின் அடித்தளமாக விளங்குகிறது என்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற பழங்குடியினர் கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய அவர், காலப்போக்கில் பல மாற்றங்கள் நிகழ்ந்தாலும், இந்திய நாகரிகத்தின் மூல ஒற்றுமை எந்தக் காலத்திலும் குலையாமல் தொடர்கிறது எனக் கூறினார்.
இன்றைய காலத்தில் ‘பழங்குடியினர்’ என அழைக்கப்படும் சமூகங்களே, இந்து மதமும் அதன் பண்பாட்டும் உருவானதற்கான அடிப்படை ஆதாரம் என அவர் விளக்கினார்.
பழங்குடியின மக்களுக்கு மதம் இல்லை என்று கூறுவது முற்றிலும் தவறான கருத்து என்றும், அந்த சமூகங்களில் பண்டைய காலம் முதல் தனித்துவமான வழிபாட்டு மரபுகள், அவற்றின் பின்னணியில் உள்ள ஆழ்ந்த தத்துவ சிந்தனைகள் மற்றும் நம்பிக்கைகள் இன்றளவும் உயிர்ப்புடன் நிலவி வருவதாகவும் மோகன் பாகவத் குறிப்பிட்டார்.