பனிப்பொழிவுக்கு மத்தியில் சீறிப் பாய்ந்த வந்தே பாரத் ரயில் – வைரலாகும் வீடியோ
ஜம்மு–காஷ்மீரில் நிலவும் ரம்யமான பனிப்பொழிவுக்கு மத்தியில் வந்தே பாரத் ரயில் தடையின்றி பயணித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
கடந்த சில நாட்களாக ஜம்மு–காஷ்மீர் முழுவதும் கனமான பனிப்பொழிவு பெய்து வரும் நிலையில், மலைகள், சாலைகள் மற்றும் குடியிருப்புகள் அனைத்தும் வெண்போர்வை போர்த்தியது போல் காட்சியளிக்கின்றன. இதனால் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், ஜம்மு–ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையும் தற்காலிகமாக மூடப்பட்டது.
இத்தகைய கடும் வானிலை சூழ்நிலையிலும், வந்தே பாரத் ரயில் பனிப்பொழிவைத் தாண்டி சீராக இயக்கப்பட்டு, பயணிகளுக்கு பேருதவியாக அமைந்தது. பனியால் மூடப்பட்ட ரயில் பாதையில் வந்தே பாரத் ரயில் வேகமாக பயணிக்கும் காட்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.
இந்த வீடியோவை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கடுமையான காலநிலையிலும் ரயில் சேவை தொடர்வது, இந்திய ரயில்வேயின் தொழில்நுட்ப முன்னேற்றத்தையும் செயல்திறனையும் காட்டுகிறது என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.