சிறையில் உருவான காதல் – ஆயுள் தண்டனை கைதிகளுக்கு திருமணத்திற்காக பரோல்!
ராஜஸ்தான் மாநிலத்தில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த இரு கைதிகளுக்கு திருமணம் செய்து கொள்ள 15 நாட்கள் பரோல் வழங்கப்பட்ட சம்பவம், சமூக வலைதளங்களில் பரபரப்பான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜெய்ப்பூரில் 2018 ஆம் ஆண்டு, டேட்டிங் செயலி மூலம் பழகிய துஷ்யந்த் சர்மாவை கொலை செய்து அவரது உடலை சூட்கேஸில் அடைத்து வீசிய வழக்கில் பிரியா சேத் கைது செய்யப்பட்டார். இதேபோல், அல்வார் மாவட்டத்தில் 2017 ஆம் ஆண்டு கள்ளக்காதல் தொடர்பான விவகாரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரை கொலை செய்த குற்றச்சாட்டில் அனுமார் பிரசாத் கைது செய்யப்பட்டார்.
இந்த இரு வழக்குகளிலும் 2023 ஆம் ஆண்டு இவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, சங்கனேரில் உள்ள திறந்தவெளிச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். சிறைவாசத்தின் போது இருவருக்கும் இடையே நட்பு உருவாகி, அது பின்னர் காதலாக மாறியது.
திருமணம் செய்து கொள்ள முடிவு செய்த இவர்களின் கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம், 15 நாட்கள் பரோல் வழங்க உத்தரவிட்டது. இதையடுத்து, இருவரும் தங்கள் சொந்த ஊரில் திருமணம் செய்து கொண்டனர்.
இந்த நிகழ்வை தொடர்ந்து, “ஆறு பேரை கொன்றவர்கள் திருமண வாழ்வில் ஈடுபடுவது நியாயமா?” என ஒரு தரப்பினர் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதே நேரத்தில், “திருமணம் மற்றும் பரோல் என்பது அரசியலமைப்பு வழங்கிய அடிப்படை உரிமை” என மற்றொரு தரப்பினர் வாதிட்டு வருகின்றனர். இதனால் இந்த விவகாரம் இணையத்தில் தீவிரமாக பேசப்பட்டு வருகிறது.