திருப்பதி லட்டு தயாரிப்பில் கலப்பட நெய் பயன்படுத்தப்பட்ட வழக்கு – 36 பேருக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகை
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழங்கப்படும் பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் கலப்படம் செய்யப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டில், மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) 36 பேரை குற்றவாளிகளாகக் குறிப்பிட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சிக்காலத்தில், திருப்பதி கோயில் லட்டு தயாரிப்பில் பயன்படுத்தப்பட்ட நெய்யின் தரம் குறித்து சந்தேகம் எழுந்தது. அதில் கலப்படம் செய்யப்பட்டுள்ளதாக புகார்கள் வெளியானதை தொடர்ந்து, இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக மாறியது.
பின்னர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றதும், இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. சுமார் 30 அதிகாரிகள் அடங்கிய சிபிஐ குழு, கடந்த 15 மாதங்களாக ஆந்திரப் பிரதேசம் உட்பட 12 மாநிலங்களில் விரிவான விசாரணை மேற்கொண்டது.
ஆரம்பத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு நிறுவனம் இந்த கலப்படத்திற்கு காரணம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்றது. ஆனால் விசாரணையின் போக்கில், உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ‘போலேபாபா’ நிறுவனம் தான் முக்கிய காரணம் என்றும், பலரும் இதில் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.
இந்த நிலையில், வழக்கின் முதல் குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்துள்ளது. அதில் மொத்தம் 36 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் 9 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 6 பேர் ஜாமின் பெற்று வெளியே வந்துள்ள நிலையில், மீதமுள்ள 3 பேர் தற்போது நீதிமன்றக் காவலில் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்.