ஈரானை நோக்கி அமெரிக்காவின் மிகப்பெரிய கடற்படை – டிரம்ப் அறிவிப்பு
ஈரானை நோக்கி அமெரிக்காவின் மிகப்பெரிய கடற்படை படை நகர்ந்து வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருப்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக, கடந்த டிசம்பர் 28ஆம் தேதி அந்நாட்டு மக்கள் அரசுக்கு எதிராக போராட்டங்களைத் தொடங்கினர். அந்த போராட்டங்கள் வன்முறையாக மாறியதைத் தொடர்ந்து, போராட்டக்காரர்களை அடக்க முயன்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்கா தரப்பில் டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதற்கு பதிலடியாக, சவூதி அரேபியாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களையும், இஸ்ரேலையும் குறிவைத்து நினைத்துப் பார்க்க முடியாத தாக்குதல்கள் நடத்தப்படும் என ஈரான் எச்சரித்தது.
இந்த சூழ்நிலையில், ஸ்விட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலகப் பொருளாதார உச்சி மாநாட்டில் பங்கேற்று நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு அமெரிக்காவுக்கு திரும்பும் போது, விமானத்தில் செய்தியாளர்களிடம் டிரம்ப் பல கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அப்போது பேசிய அவர், ஈரானை நோக்கி அமெரிக்காவின் மிகப்பெரிய கடற்படை படை தற்போது பயணித்து வருவதாக தெரிவித்தார்.
ஈரானை தாக்குவது தங்களின் நோக்கம் அல்ல என்றும், ஆனால் அந்நாட்டின் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் அவர் கூறினார்.
டிரம்பின் இந்த அறிவிப்பை தொடர்ந்து, ஈரான்–அமெரிக்கா இடையே போர் வெடிக்குமா என்ற அச்சம் உலக மக்களிடையே அதிகரித்துள்ளது.