நடைபாதை வியாபாரிகளுக்காக ஸ்வநிதி கிரெடிட் கார்டு திட்டம் – திருவனந்தபுரத்தில் பிரதமர் மோடி தொடக்கம்
கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தில், நடைபாதை வியாபாரிகள் மற்றும் தெரு வணிகர்களுக்காக உருவாக்கப்பட்ட ஸ்வநிதி கிரெடிட் கார்டு திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
திருவனந்தபுரத்தில் நடைபெற்ற பல்வேறு வளர்ச்சி திட்டங்களின் தொடக்க விழா மற்றும் அடிக்கல் நாட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிரதமர் மோடி, இந்த ஸ்வநிதி கடன் அட்டை திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், இந்த திட்டம் இந்தியா முழுவதும் உள்ள தெரு வியாபாரிகள், நடைபாதை தொழிலாளர்கள் மற்றும் சிறு வணிகர்களுக்கு நேரடி பொருளாதார பலன்களை வழங்கும் என தெரிவித்தார்.
மறுசீரமைக்கப்பட்ட ஸ்வநிதி திட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த கடன் அட்டை, யுபிஐ வசதியுடன் இணைக்கப்பட்ட RuPay கிரெடிட் கார்டாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த அட்டை, டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதோடு, வணிகர்களின் தினசரி பணப்புழக்க தேவைகளை சமாளிக்க வட்டி இல்லாத கடன் வசதியையும் வழங்குகிறது.
தவணை கட்டணங்களை ஒழுங்காக செலுத்தும் பயனாளர்கள், ஸ்வநிதி கிரெடிட் கார்டின் மூலம் ரூ.50,000 வரை கூடுதல் கடன் பெற முடியும்.
மேலும், பணமில்லா பரிவர்த்தனைகளை அதிகரிக்கும் நோக்கில், இந்த அட்டையை பயன்படுத்துவோருக்கு ஆண்டுக்கு ரூ.1,200 வரை கேஷ்பேக் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.