மரண தண்டனை தொடர வேண்டுமா? மாற்று வழியா? – உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்
மரண தண்டனையை எந்த விதமான வலியும் இன்றி நிறைவேற்றும் மாற்று வழிகள் குறித்து மத்திய அரசு தீவிரமாக ஆய்வு மேற்கொண்டு வருவதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தூக்கு தண்டனையை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 354வது பிரிவு, உட்பிரிவு 5-ஐ ரத்து செய்யக் கோரி, மூத்த வழக்கறிஞர் ரிஷி மல்கோத்திரா கடந்த 2017ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், தூக்கு தண்டனை என்பது காட்டுமிராண்டித்தனமான செயல் மட்டுமல்லாமல், ஒரு மனிதன் மரியாதையுடன் உயிர் இழக்கும் உரிமையையே கேள்விக்குறியாக்குவதாகவும், அதிக வலியை ஏற்படுத்தும் இந்த முறைக்கு மாற்றாக வேறு மனிதநேயமான வழிகளில் மரண தண்டனையை நிறைவேற்ற நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் தலைமை வழக்கறிஞர் ஆர்.வெங்கட்ரமணி ஆஜராகி வாதிட்டார்.
இந்தியாவில் தற்போது நடைமுறையில் உள்ள தூக்கு தண்டனை முறையை தொடர்ந்து அனுமதிக்க வேண்டுமா, அல்லது வலியற்ற புதிய மாற்று முறையை கொண்டு வர வேண்டுமா என்பது குறித்து அரசு ஆழமான ஆய்வில் ஈடுபட்டு வருவதாக அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இவ்வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மனு மீதான தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளனர்.