நாட்டைக் காக்கும் பணியோடு மக்களின் பசியையும் தணிக்கும் ராணுவ வீரர் – பாராட்டுகளால் நெகிழ்ச்சி
எல்லையில் நின்று தேசத்தை பாதுகாப்பதுடன், ஏழை மக்களின் பசி மற்றும் வறுமையை போக்கும் சேவையிலும் ஈடுபட்டு வரும் இந்திய ராணுவ வீரர் சக்தி பாலுக்கு நாடு முழுவதும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த 31 வயதான சக்தி பால், சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பணிநிறைவு பெற்றுத் தன் இல்லத்துக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, சாலையோரத்தில் பசியால் மயங்கியிருந்த ஒரு முதியவரைக் கண்டார். அந்த ஒரே நிகழ்வு, அவரது வாழ்க்கைப் பாதையை முற்றிலும் மாற்றியதாக கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து, தனது தனிப்பட்ட சேமிப்புகளை பயன்படுத்தி, சாலையோரத்தில் வசிக்கும் மக்களுக்காக உணவு சமைத்து வழங்கத் தொடங்கினார்.
உணவு இலவசமாக வழங்கப்பட்டால் அதற்கான மதிப்பு குறையும் என்ற எண்ணத்தில், ஒரு ரூபாய் மட்டும் வசூலித்து உணவு வழங்கும் திட்டத்தை அவர் அறிமுகப்படுத்தினார். இன்றைக்கு, இந்த முயற்சியின் மூலம் தினமும் 600-க்கும் அதிகமானோர் பயன் அடைந்து வருகின்றனர்.
இதோடு மட்டுமல்லாமல், சிலிகுரி பகுதிகளில் உள்ள பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களின் கல்வி உதவிக்காக பள்ளி உபகரணங்களை வழங்குவதோடு, வசதியற்ற குடும்பங்களுக்கு புத்தாடைகள் மற்றும் போர்வைகள் வழங்கியும் அவர் சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறார்.