“சர்வதேச ரவுடி” போக்கில் டிரம்ப் – உலகம் முழுவதும் அதிகரிக்கும் விமர்சனங்கள்
பகிரங்க மிரட்டல்கள், பொருளாதார அழுத்தங்கள் ஆகியவற்றை அரசியல் ஆயுதங்களாகப் பயன்படுத்தும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் இரண்டாவது ஆட்சிக் கால வெளிநாட்டு கொள்கைகள், உலக அரசியல் சூழலை மேலும் பதற்றமடையச் செய்து, அமெரிக்காவின் நெருங்கிய நண்பர் நாடுகளிடையே கூட தீவிர அச்சத்தை உருவாக்கியுள்ளது.
உலக அரங்கில் மீண்டும் அதிர்வலைகளை கிளப்பிக் கொண்டிருக்கிறார் டிரம்ப். அவரது இரண்டாம் பதவிக்காலத்தில் எடுக்கப்படும் முடிவுகள், அமெரிக்காவின் நீண்ட கால கூட்டணி நாடுகளையே சங்கடத்தில் ஆழ்த்தும் வகையில் அமைந்துள்ளன.
ஒருபுறம் கிரீன்லாந்து முதல் காசா வரை, மறுபுறம் ஐரோப்பா மற்றும் நேட்டோ உறுப்புநாடுகள் வரை, டிரம்பின் அணுகுமுறை தூதரக சமநிலையை விட்டு விலகி, நேரடி அழுத்தம், மிரட்டல் மற்றும் கட்டாய அரசியல் தந்திரங்களை மையமாகக் கொண்டதாக மாறிவிட்டதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இந்த சர்ச்சைகளின் மையமாக கிரீன்லாந்து விவகாரம் உள்ளது.
அந்த ஆர்க்டிக் தீவை அமெரிக்க கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது சர்வதேச பாதுகாப்புக்குத் தேவை என்றும்,
இதில் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என்றும் டிரம்ப் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
ஆனால் அரசியல் ஆய்வாளர்கள், இதனை
பொருளாதார வரி மிரட்டல்கள்,
பொது வெளி அழுத்தங்கள்,
சமூக ஊடகங்களில் நடத்தப்படும் அரசியல் நாடகங்கள்
மூலம் முன்னெடுக்கப்படும் கட்டாய அரசியல் நடவடிக்கையாக பார்க்கின்றனர்.
இதே நேரத்தில், காசாவுக்காக முன்வைக்கப்பட்ட புதிய “அமைதி வாரிய” (Board of Peace) திட்டம்,
மேலும் ஐரோப்பாவை குறிவைக்கும் டிரம்பின் கடுமையான வர்த்தக நிலைப்பாடுகள்,
நேட்டோ கூட்டணியின் ஒற்றுமையையே சோதனைக்கு உட்படுத்தியுள்ளது.
சமீபத்தில் வெனிசுலாவில் நடைபெற்ற அமெரிக்க ஆதரவு கொண்ட தலையீட்டுக்குப் பின்னர்,
டென்மார்க் கட்டுப்பாட்டில் உள்ள கிரீன்லாந்து மீது டிரம்ப் வெளிப்படையாக உரிமை கோரியது,
சர்வதேச அளவில் சர்ச்சையை மேலும் தீவிரப்படுத்தியது.
அதேபோல், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் – டிரம்ப் இடையிலான முரண்பாடுகள் கூட பெரும் கவனம் பெற்றன.
கிரீன்லாந்து குறித்த அமெரிக்காவின் நோக்கங்களை புரிந்துகொள்ள முடியவில்லை என மேக்ரான் அனுப்பிய தனிப்பட்ட தகவலை,
டிரம்ப் பொதுவெளியில் வெளியிட்டது,
இரு நாடுகளின் உறவுகளில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
இந்தப் பின்னணியில்,
காசா அமைதி வாரியத்தில் இணைவதை பிரான்ஸ் மறுத்ததற்குப் பதிலாக,
200 சதவீத வரி விதிக்கப்படும் என டிரம்ப் விடுத்த எச்சரிக்கை,
பிற ஐரோப்பிய நாடுகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
குறிப்பாக,
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட படங்கள்,
அமெரிக்க வரைபடங்களில் கனடா மற்றும் கிரீன்லாந்தை ஒன்றிணைத்து காட்டும் காட்சிகள்,
டிரம்பின் அரசியலில் குறியீடுகள், உளவியல் மிரட்டல்கள் முக்கிய ஆயுதங்களாக மாறிவிட்டதை வெளிப்படுத்துகின்றன.
இதன் விளைவாக,
ஐரோப்பிய ஒன்றியம் 93 பில்லியன் யூரோ மதிப்பிலான எதிர்தடுப்பு நடவடிக்கைகளை பரிசீலிக்கத் தொடங்கியுள்ளது.
மேலும், பிரிட்டனில் அமெரிக்காவுடன் இருந்த ‘சிறப்பு உறவு’ முறிவின் விளிம்பில் உள்ளது என அரசியல் வட்டாரங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
இந்தச் சூழலில்,
டிரம்பின் வெளிநாட்டு கொள்கை அமெரிக்காவின் உலகளாவிய மதிப்பையும், அதன் பாரம்பரிய தூதரக முகத்தையும் மாற்றி,
பல நாடுகளை பொருளாதார மற்றும் அரசியல் மோதல்களுக்கு தயாராக நிறுத்தி வருவதாக
சர்வதேச அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.