கேரள முன்னேற்றத்திற்கான மத்திய அரசின் முயற்சிகள் பலன் அளிக்கத் தொடங்கியுள்ளன – பிரதமர் மோடி
கேரள மாநில வளர்ச்சிக்காக மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் தற்போது நேர்மறையான விளைவுகளை அளிக்க ஆரம்பித்துள்ளன என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில்,
நாகர்கோவில் – மங்களூரு,
திருவனந்தபுரம் – தாம்பரம்,
திருவனந்தபுரம் – சர்லப்பள்ளி ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படவுள்ள மூன்று புதிய அம்ரித் பாரத் ரயில்கள்,
மேலும் திருச்சூர் – குருவாயூர் இடையிலான புதிய பயணிகள் ரயில் சேவையையும் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, கேரளத்தில் செயல்படுத்தப்படவுள்ள பல வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் அவர் பங்கேற்றார்.
பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி,
கேரள வளர்ச்சியை முன்னேற்றும் மத்திய அரசின் திட்டங்கள் புதிய வேகத்தை பெற்றுள்ளதாகவும்,
மாநிலத்தின் ரயில் போக்குவரத்து கட்டமைப்பு மேலும் வலுவடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், திருவனந்தபுரத்தை நாட்டின் முக்கிய ஸ்டார்ட்-அப் மையங்களில் ஒன்றாக மாற்றும் வகையில் முக்கிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் தெரிவித்தார்.
கேரளாவிலிருந்து தொடங்கி, நாடு முழுவதும் உள்ள ஏழை மற்றும் எளிய மக்களின் நலனுக்காக ஒரு முக்கிய முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறிய பிரதமர், பிஎம் ஸ்வநிதி கடன் அட்டை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக நினைவூட்டினார்.
பிஎம் ஸ்வநிதி யோஜனா திட்டத்தின் மூலம்,
லட்சக்கணக்கான தெருவியாபாரிகள் வங்கிக் கடன்களை எளிதாகப் பெறும் வாய்ப்பு உருவாகியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.