ரஷ்யாவில் 60 ஆண்டுகளில் இல்லாத பனிப்பொழிவு – நகரங்கள் பனிக்குள் மூழ்கின
ரஷ்யாவில் கடந்த 60 ஆண்டுகளில் காணாத அளவுக்கு கடும் பனிப்பொழிவு பதிவாகி வருவதால், பல பகுதிகளில் வீடுகள், வாகனங்கள் மற்றும் சாலைகள் முழுவதும் பனியில் புதைந்துள்ளன.
ரஷ்யாவின் தொலைதூர கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கம்சட்கா தீபகற்பத்தில், கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை போன்ற பனிப்பொழிவு, அப்பகுதியை கடுமையாக பாதித்துள்ளது. இது, பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு மோசமான நிலை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோ மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ந்து பனி அதிகரித்து வருகிறது. ஆனால், கம்சட்கா தீபகற்பத்தில் நிலவும் சூழல் மிகவும் அபாயகரமானதாக மாறியுள்ளது.
சாதாரணமாக பல மாதங்களில் பெய்ய வேண்டிய பனி, சில நாட்களிலேயே அதிக அளவில் பொழிந்ததால், சில இடங்களில் 15 அடி உயரம் வரை பனிக்கட்டிகள் மலை போன்று குவிந்துள்ளன.
இதன் விளைவாக, கம்சட்காவின் முக்கிய நகரமான பெட்ரோபாவ்லோவ்ஸ்க்–கம்சட்ஸ்கி நகரம் முழுவதும் பனியால் மூடப்பட்டுள்ளது. அங்கு உள்ள தெருக்கள், கட்டிடங்கள், கார்கள் மற்றும் குடியிருப்புகள் அனைத்தும் பனிக்குள் அடங்கியுள்ளன.
இந்த அசாதாரண நிலை காரணமாக, அந்தப் பகுதிகளில் அவசர நிலை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக உள்ளூர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.